தமிழக கடலோர பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்பு!

246 0

குமரி கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை கடலோர கர்நாடகா பகுதியில் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக கேரளா, கடலோர கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்திலும் மழை பெய்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வட தமிழகத்தை ஒட்டியுள்ள கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை இருந்தது.

இதன் காரணமாக காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட வட மாவட்டங்களில் மழை பெய்தது. தற்போது குமரி கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால், தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

குமரி கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளது. இது தெலுங்கானா மாநிலம் வரை பரவி உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) இந்த தாழ்வுநிலையால் சாதகமான சூழல் ஏற்படும் பட்சத்தில் தமிழக கடலோர பகுதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடலோர ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்.

அதுமட்டுமில்லாமல் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங் களில் மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

பெரியாறு 7 செ.மீ., சின்னக்கல்லாறு, வால்பாறை ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ., மங்களபுரம் 3 செ.மீ., சேலம், நடுவட்டம், ஜி பஜார், விராலிமலை, செய்யூர், குளச்சல் ஆகிய இடங்களில் 2 செ.மீ. மழை பெய்துள்ளது.

Leave a comment