ஈராக்: கண்ணிவெடி தாக்குதலில் காயமடைந்த பெண் பத்திரிகையாளர் உயிரிழந்தார்

221 0

ஈராக்கின் மோசூல் நகரில் கண்ணிவெடியில் சிக்கி படுகாயமடைந்த மேலும் ஒரு பிரான்ஸ் நாட்டு பெண் பத்திரிகையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஈராக்கின் வரலாற்று சிறப்பு மிக்க மோசூல் நகரை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அப்பகுதிக்குள் ராணுவம் நுழைவதை தடுக்கும் வகையில் பல இடங்களில் கண்னிவெடிகளை புதைத்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் அமெரிக்கா விமானப்படையின் ஆதரவுடன் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் நடைபெறும் போர் நிலவரங்களை சர்வதேச ஊடகங்களை சேர்ந்த செய்தியாளர்கள் சேகரித்து வருகின்றனர்.

அவர்களில் சிலர் ஐ.எஸ். தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த ஒரு கண்ணிவெடியில் கடந்தவாரம் சிக்கினர். அவர்களில் ஈராக் நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர் பக்தியார் ஹட்டாட் மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர் ஸ்டெஃபேன் வில்லெனியூவே ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பிரான்ஸ் நாட்டின் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தை சேர்ந்த பெண் செய்தியாளர் வெரோனிக் ராபர்ட் என்பவர் படுகாயங்களுடன் ஈராக்கில் உள்ள பிரபல மருத்துவமனையில் முதல்கட்ட ஆபரேஷனுக்கு பின்னர் பிரான்ஸ் நாட்டுக்கு நேற்று அனுப்பப்பட்டார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள பெர்ஸி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வெரோனிக் ராபர்ட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவர் பணியாற்றிவந்த தொலைக்காட்சி நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

Leave a comment