சீனா: நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு, 100-க்கும் அதிகமானோர் மாயம்

271 0

சீனாவின் சென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சுச்சுவான் பகுதியில் நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் மாயமாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் தென்மேற்கு பகுதியான சிச்சுவான் மாகாணத்தில் மாவோக்ஸியன் கவுண்டியில், சின்மோ என்ற மலைப்பாங்கான கிராமம் உள்ளது. இந்த கிராமம், திபெத்தையொட்டிய பகுதியில் அமைந்துள்ளது. அங்கு பலத்த மழை பெய்து வந்த நிலையில், அந்த கிராமத்தில் நேற்று காலை 6 மணிக்கு பொழுது விடிந்தபோது, பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் 60 வீடுகள் தரை மட்டமாகின. அவற்றில் வசித்து வந்த நூற்றுக்கும் அதிகமானோர் மண்ணோடு மண்ணாக உயிரோடு புதைந்தனர். தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 15 பேர் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலச்சரிவு, அங்குள்ள ஒரு ஆற்றில் 2 கி.மீ. தொலைவுக்கு தடையை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி. 1.6 கி.மீ. நீள சாலையிலும் தடைகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலச்சரிவு குறித்த தகவல்கள் அறிந்ததும், தீயணைப்பு படை வீரர்கள் 500-க்கும் மேற்பட்டோர், மருத்துவப் பணியாளர்கள், மீட்பு படையினர் அங்கு விரைந்தனர்.

கொட்டுகிற மழைக்கு மத்தியிலும், நிலச்சரிவால் விழுந்த பாறைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டவர்களை மீட்பதற்கு 1000 பேர் அடங்கிய மீட்புக்குழுவினர் போராடி வருகின்றனர். மீட்கப்படுகிறவர்களை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்வதற்காக 6 ஆம்புலன்சுகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

ஒரு தம்பதியரும் அவர்களது ஒரு மாத குழந்தையும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் ஆம்புலன்சு மூலம் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மீட்பு பணியில் செயற்கை கோள் கருவியுடன் இணைந்த வாகனமும், ஆளில்லா விமானமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், மேலும் மூன்று நாட்களுக்கு அந்தப் பகுதியில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை இடைவிடாது பெய்தால் அது மீட்பு பணியில் தொய்வை ஏற்படுத்தி விடும்.

இதற்கிடையே நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை தேடி, மீட்பதற்காக ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும் என்று சீன அதிபர் ஜின்பிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a comment