ஹட்டன் குப்பைகளை கொட்டுவதற்கு 5 இடங்கள் நிரணயிக்கப்பட்டுள்ளன

405 0

ஹட்டன் நகரத்திலிருந்து அகற்றப்படும் குப்பைகளை கொட்டி பராமரிக்க அந்த பகுதியில் 5 தோட்டங்களில் உள்ள இடங்கள் பிரேரிக்கப்பட்டுள்ளன.

இதில் பொருத்தமான இடமொன்றை தெரிவு செய்து குப்பைகளை கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அத்தோடு குப்பைகளை கொட்டுவதற்கு அந்த இடங்கள் பொருத்தமற்றதாக இருப்பின் வேறு இடங்களை தெரிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று (23) அட்டன் டிக்கோயா நகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.

மவுன்ஜீன், டெம்பள்ஸ்டோவ், வெளிஓயா, அய்ற்றி, பழைய கொழும்பு வீதியில் தெரிவுசெய்யப்பட்ட குறித்த ஒரு இடம் மற்றும் லொனெக் ஆகிய இடங்கள் தற்போது பிரேரிக்கப்பட்டுள்ளன, இந்த கலந்துரையாடலில் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பிர்களும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஒருவர் மாத்திரமே கலந்து கொண்டார்.

இதில் ஹட்டன் டிக்கோயா நகர சபையின் செயலாளர், அம்பகமுவ பிரதேச செயலகத்தின் செயலாளர், நுவரெலியா பிரதேச செயலாளர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ஹட்டன் டிக்கோயா நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை குறித்த நகரசபை கொட்டி பராமரிப்பதற்கு இடம் ஒன்று இல்லாமையினால் கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகள் இருந்த வந்தது.

அட்டன் குடாஓயா குப்பை மேட்டில் கொட்டப்பட்டு வந்த குப்பைகள் போராட்டங்களின் பின் நிறுத்தப்பட்டதை அடுத்து, ஹட்டன் நகர குப்பைகள் கொட்டி பராமரிப்பதற்கு இடமற்று போயிருந்தது. கடந்த 15ம் திகதி வியாழக்கிழமை நகர வர்த்தகர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நகரில் பாரிய போராட்மொன்றை நடத்தினார்கள்.

ஹட்டன் நகரத்தின் பொது சந்தை மற்றும் ஹட்டன் நகரில் சில பகுதிகளில் கொட்டப்பட்டு தேங்கி கிடந்த குப்பைகளை அகற்றி தருமாறு கோரிக்கை விடுத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் குப்பைகளை அகற்றுவதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார்.

இதனடிப்படையில் தேங்கி கிடந்த குப்பைகளை நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பத்தனை குப்பை மேட்டில் கொட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இந்த விடயம் கைகூடவில்லை. ஆகையால் பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமானின் கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி வளாகத்தில் பாரிய குழி அமைக்கப்பட்டு குப்பைகள் அங்கே கொட்டப்பட்டு வந்தது.

இந்த நிலையில் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அட்டன் நகரில் இடம்பெற்ற அடிக்கல் நாட்டும் விழா ஒன்றில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில், அட்டன் குப்பைகளை கொட்டுவதற்கு இடம் ஒன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கான அமைச்சரவை பத்திரத்தை நானும், அமைச்சர் நவீன் திஸாநாயக்கவும் பெறுவோம். இவ் விடயத்தில் தேவையற்றவர்கள் தலையீட கூடாது என சுட்டிக்காட்டி பேசியிருந்தார்.
இந்த நிலையில் அட்டன் குப்பை விவகாரம் தொடர்பாக அட்டன் டிக்கோயா நகர சபையில் கலந்துரையாடல் ஒன்று இன்று (23) ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

Leave a comment