வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக விசாரணைகள்!

391 0

வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காக் காவல்துறை அறிவித்துள்ளது.

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இனங்களுக்கெதிராக கருத்துக்கள் வெளியிட்டு வருவதாக முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து அவர் மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இவர் பேசிய பேச்சுக்கள் இனவாதத்தைத் தூண்டியுள்ளதா? இல்லையா? என்பது தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களமே முடிவெடுக்கவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் நடைபெற்றபோது காவல்துறை ஊடகப்பேச்சாளர் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இனங்களுக்கு எதிரான பேச்சுக்களை வெளியிட்டமை தொடர்பில் அரசியல் வாதியான எம்.கே.சிவாஜிலிங்கம் மீது முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மே மாதம் 16ஆம் நாளிலிருந்து இன்றுவரையான காலப்பகுதியில், இனங்களுக்கெதிரான வன்முறைகள், வேற்றினத்தவர்களின் வர்த்தக நிலையங்கள், மதவழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் 14 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை சிங்களவர் 12, முஸ்லிம்கள் இருவர் மற்றும் தமிழர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Leave a comment