அட்வகேட் ஜெனரலாக புகழேந்தி நியமனம்

344 0

201608040820302891_Additional-Advocate-General-of-Tamil-Nadu-High-Court-in_SECVPFமதுரை ஐகோர்ட்டு கிளைக்கு தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பி.புகழேந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் மேல ஆமத்தூர் ஆகும். இவருடைய தந்தை பாலகிருஷ்ணன் ஓய்வு பெற்ற தாசில்தார் ஆவார்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த புகழேந்தி, புதுச்சேரி டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் 1990-ம் ஆண்டு பி.ஏ.,பி.எல். பட்டப்படிப்பை முடித்தார். அதே ஆண்டில் கோவில்பட்டியில் வக்கீல் தொழிலை தொடங்கினார். அதன்பின்பு தூத்துக்குடி செசன்சு கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றினார். தூத்துக்குடி, கோவில்பட்டியில் வக்கீலாக இருந்தபோது சென்னை ஐகோர்ட்டிலும் ஆஜராகி வந்தார்.

பின்னர், சென்னை ஐகோர்ட்டில் ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ராஜேசுவரனிடம் ஜூனியராக இருந்தார். அப்போது பல முக்கிய குற்ற வழக்குகளில் ஆஜராகி உள்ளார். 2004-ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டு கிளை தொடங்கியதும் மதுரைக்கு வந்து வக்கீல் தொழிலில் ஈடுபட்டார். 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் மதுரை ஐகோர்ட்டு கிளைக்கு சிறப்பு அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார். தற்போது கூடுதல் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ள அவர் நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அரசு வக்கீல்கள், அதிகாரிகள், ஐகோர்ட்டு கிளை வக்கீல்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.