கோத்தபாயவே பொதுபல சேனாவை பலமான அமைப்பாக உருவாக்கினார்

509 0

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை நாம்  ஒளித்து வைக்கவில்லை. ஞானசார தேரரை பயன்படுத்தி ஜாதிக ஹெல உறுமயவை வீழ்த்த மஹிந்த  ராஜபக் ஷ  முயற்சி செய்கிறார்  என அமைச்சர்  சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.  

கோத்தபாய ராஜபக்ஷவே பொதுபல சேனாவை பலமான பெளத்த அமைப்பாக உருவாக்கினார். பொதுபல சேனாவினருக்கு நிதி உதவிகளையும்  வாகனங்களை வழங்கி  அவ்வமைப்பை பலப்படுத்தினார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜாதிக ஹெல உறுமைய கட்சியின் அலுவலகத்தில்  நேற்று  இடம்பெற்ற ஊடக சந்திப்பில்  அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

பொதுபல சேனா பெளத்த அமைப்பினர் ஆரம்பத்தில் எம்முடன் இணைந்து செயற்பட்ட போதிலும் கடந்த 2004 ஆம் ஆண்டு எம்மில் இருந்து தனித்து சென்றுவிட்டனர். அதில் இருந்து எமக்கும் பொதுபல சேனா அமைப்பினருக்கும் எந்த தொடர்புகளும் இருந்ததில்லை. ஒருசில விடயங்களில் நாம் பொதுப்படையாக கருத்துக்களை முன்வைத்த போது அதில் பொதுபல சேனா அமைப்பினரும் உள்ளடக்கப்பட்டனரே தவிர எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் பொதுபல சேனாவை ஆதரித்து பேசவில்லை.

பொதுபல சேனா அமைப்பினர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல அடியாட்களின் கீழ் செயற்பட்டனர். கடந்த 2005 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டனர். அதேபோல் 2010 ஆம் ஆண்டு சரத் பொன்சேகாவுடன் இணைந்து செயற்பட்டனர்.  கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து செயற்பட்டனர். ஆகவே இவர்களின் நோக்கம் மாறுபட்ட ஒன்றாகும்.

நாம் பொதுபல சேனாவை ஆதரித்து செயற்படுவதாக  ராஜபக் ஷக்கள் கூறுவது வேடிக்கையாக உள்ளது. அளுத்கம சம்பவத்தின் போதும் நுகேகொடை கூட்டத்தின் போதும்  நாம் பொதுபல சேனாவை ஆதரித்து அமைச்சரவையில் பேசியதாக கூறும் இவர்கள் அதன் பின்னர் நடந்த உண்மைகளை கூற மறுக்கின்றனர். குறிப்பாக சிங்கள பெளத்த மக்களின் பலத்தில் செயற்பட்ட ஜாதிக ஹெல உறுமையவின் பலத்தை வீழ்த்த மஹிந்த ராஜபக் ஷவும் கோத்தாபாய ராஜபக் ஷ பொதுபல சேனாவினருக்கு நிதி உதவிகளை வழங்கியும் வாகனங்களை வழங்கியும் அவ்வமைப்பை பலப்படுதியத்தை ஏன் வெளிப்படுத்தவில்லை.

கோத்தபாய ராஜபக் ஷவே பொதுபல சேனாவை பலமான பெளத்த அமைப்பாக உருவாக்கினார். இந்த நாட்டில் குழப்பங்கள் ஏற்படுத்த தைரியத்தை கொடுத்ததும் அவர்களேயாவர். ஆகவே இந்த உண்மைகளையும் ராஜபக்ஷவினர் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை தாம் ஒளித்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவையாகும். நாம் அவரை மறைத்து வைக்கவில்லை. அதற்கான அவசியமும் எனக்கு இல்லை. அவர் அவசியமான நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராவார் என அவ்வமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஆகவே எம்மை இந்த விடயத்துடன் தொடர்பு படுத்தி பேசவேண்டிய அவசியம் இல்லை.  என்னினும் ஊடகங்கள் ஊடாக எந்தவகையிலாவது ஞானசார தேரரை பயன்படுத்தி ஜாதிக ஹெல உறுமையவை வீழ்த்த மஹிந்த  ராஜபக் ஷ  முயற்சி செய்கிறார்.

இன்று நாட்டில் ஜனநாயகத்தை சீரழிக்க ஒரு சிறிய பிரிவு முயற்சி செய்து வருகின்றது. இந்த குழு சர்வதேச பயங்கரவாதிகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது. இந்த நாட்டில் ஜனநாயகத்தை சீரழிக்க இந்த குழுவினர் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நகர்வுகளை சாதாரண விடயமாக கருத்தில் கொள்ளக்கூடாது. இது முகவும் மோசமான நடவடிக்கைகள் என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்  என்றார்.

Leave a comment