டிக்கோயா நகரசபை விரைவில் மாநகர சபையாக மாற்றம் பெறும் : மனோ

315 0

ஹட்டன் டிக்கோயா நகரசபை வெகு விரைவில் மாநகர சபையாக மாற்றம் பெறும். அதே போல நுவரெலியா மாவட்டத்தில் 12 பிரதேச செயலகங்களாக உயர்வு பெறும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

ஹட்டன் ரயில் நிலையம் மற்றும் புதிய கடைத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

450 மில்லியன் ரூபா நிதி செலவில் நிர்மாணிக்கப்படும் நவீன பலநோக்கு கட்டடத்தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெற்றது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன்,

மலையக சமூகத்திற்கு பாரிய வரலாறும் கலாச்சாரமும். இருக்கிறது தமிழ் முற்போக்கு கூட்டணியின் உருவாக்கத்தின் பின் எமது சமூகம் தலை நிமிர்ந்து சுய மரியாதையுடன் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அதன் ஒரு கட்டமே இன்றைய அடிக்கல் நாட்டும் நிகழ்வு. விரைவில் ஹட்டன் டிக்கோயா நகரசபையும் தலவாக்கலையும் மாநகர சபையாக மாற்றம் பெறும். இதுவரை நகரசபை தலைவர்களே இருந்தனர்.

மாநகரசபையான பின் மேயர்களே எமக்கு கிடைப்பார்கள். இதையும் எதிர்காலத்தில் சிலர் தான்தான் செய்ததாக செல்வார்கள். அவ்வாறு செய்வதாயின் 40 ஆண்டுகள் அமைச்சராக இருந்தபோது செய்திருக்க வேண்டும்.

தற்போது நாங்கள் செய்கின்றோம். நீங்கள் வேடிக்கை மட்டும் பாருங்கள் என சொல்லி வைக்க விரும்புகிறேன். இன்று நாங்கள் தேசிய இனமாக அடையாளப்படுத்தி வருகிறோம்.

தற்போது வட மாகாணத்தில் முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழரசு கட்சிக்கும் இடையில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

அவை விரைவில் சமரசமடைய வேண்டும். தமிழ் மக்கள் நிம்மதியோடு வாழ வேண்டும் என்பது தமிழ் முற்போக்கு கூட்டணியின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நமது சமூகம் அபிவிருத்தியடைந்து வருகின்றது வீட்டுத்திட்டம் பாதை அபிவிருத்தி, கல்வி, காணி உரிமை போன்ற விடயங்களில் நாம் அபிவிருத்தியடைந்து வருகின்றோம். தொடர்ந்தும் நாம் ஒற்றுமையுடன் இருந்து எமது அரசியல் ரீதியான உரிமைகளை வென்றெடுப்போம் என்றார்.

Leave a comment