தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி தனித்தியங்கத் தீர்மானம்!

327 0

வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை, இலங்கைத் தமிழரசுக் கட்சி மீளப்பெறாவிட்டால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி தனித்தியங்கத் தீர்மானித்துள்ளதாக, ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் மற்றும் மாகாணசபை ஆகியவற்றில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கும் தமது கட்சி உறுப்பினர்களும், இனிவரும் காலங்களில் தனித்தியங்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்றும், அவர் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈபிஆர்எல்எப், புளொட் மற்றும் டெலோ ஆகிய மூன்று கட்சிகளும், இதுவிடயமாகக் கலந்துரையாடியே, இந்தத் தீர்மானத்துக்கு வந்துள்ளதாகவும் கூறிய அவர், தமது கட்சிகளின் இந்த நிலைப்பாடு குறித்து, கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், தமிழரசுக் கட்சி ஆகியவற்றுக்கும் அறிவித்துள்ளதாகவும் கூறினார்.

“ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ள மாகாணசபை அமைச்சர்களுக்கு எதிராக, முதலமைச்சரின் தீர்மானம் நியாயமானதாகும். இதனை முன்னிலைப்படுத்தி, முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை, இலங்கைத் தமிழரசுக் கட்சி கொண்டுவந்துள்ளது. இதனை, கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகள் வன்மையாகக் கண்டிக்கின்றன” என்று, அவர் மேலும் கூறினார்.

Leave a comment