இன்னும் 3 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி நீடித்தால் தி.மு.க. காணாமல் போய்விடும்:

342 0

அ.தி.மு.க. ஆட்சி இன்னும் 3 ஆண்டுகள் நீடித்தால், தி.மு.க. காணாமல் போய் விடும் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசினார்.

மத்திய கப்பல் போக்கு வரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு மினி ரத்னா இந்திய அரசு நிறுவனமான காமராஜர் துறைமுகம் சார்பில் பா.ஜ.க. அரசின் 3-ம் ஆண்டுகள் சாதனை மற்றும் அனைவரும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சி விழா, வேலூர் ரங்காபுரம் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

காமராஜர் துறைமுக நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் பாஸ்கராச்சார் தலைமை தாங்கினார். பொது மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை பொது மேலாளர் ராதா கிருஷ்ணன் வரவேற்றனர்.

சிறப்பு அழைப்பாளராக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை, கப்பல் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, மத்திய அரசின் 3 ஆண்டுகள் சாதனை காணொலி காட்சியை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:- மோடி தலைமையிலான மத்திய அரசு 3 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. நாடு முழு வளர்ச்சியடைந்துள்ளது. ஆரோக்யமான நிர்வாகம் நடக்கிறது.

செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிய போது மக்களிடம் தன்னை சாதாரண வேலைக்காரன் என்று மோடி கூறினார். சாதாரண ஊழியரை போலவே அவர் செயல்பட்டு வருகிறார்.

மத்திய அரசின் 3 ஆண்டு சாதனைகள் 700 மாவட்டங்களில் மக்களிடம் சென்று எடுத்துரைக்கப்பட உள்ளது. இதற்காக மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்.கள் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.

பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 125 கோடி மக்கள் தொகையில் 4 கோடி பேர் மட்டுமே வங்கி கணக்கு வைத்திருந்தனர். மத்தியில் பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளில் 29 கோடி பேர் வங்கி கணக்கு தொடங்கி உள்ளனர்.

இதன்படி, 65 ஆயிரம் கோடி பண பரிவர்த்தனை நடந்துள்ளது. நம் நாட்டில் அதிக விபத்துகள் ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் விபத்துக்குள் ஏற்படுகிறது. இதில், 1½ லட்சம் பேர் வரை இறக்கிறார்கள். இவர்களின் குடும்ப நலனுக்காக விபத்து காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் 17 கோடி பேர் விபத்து காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்துள்ளனர். தமிழகத்தில் 65 லட்சத்து 857 பேரும், வேலூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 67 ஆயிரம் பேரும் விபத்து காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.

இதைத்தவிர, ஆயுள் காப்பீட்டு திட்டம், ஓய்வூதிய திட்டமும் தொடங்கப்பட்டு உள்ளது. ஓய்வூதிய திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது உள்ளவர்கள் வரை சேரலாம். இத்திட்டம் மூலம் தனி நபருக்கு ரூ.1000 முதல் ரூ.5000 வரை கிடைக்கும்.

மேலும் பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், கியாஸ் மானிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி யதாவது:-

குளைச்சல் துறைமுகம் உறுதியாக அமைக்கப்படும். அதற்கான ஆய்வுகள் நடந்து வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். தி.மு.க. சரிவை சந்தித்து வருகிறது. தமிழகத்தில் இவ்வளவு அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், தி.மு.க.வில் யாரும் சேரவில்லை.

அ.தி.மு.க. ஆட்சி இன்னும் 3 ஆண்டுகள் நீடித்தால், தி.மு.க. காணாமல் போய் விடும். இந்திரா காந்தி காலத்தில் 356-வது சட்டப் பிரிவை பயன்படுத்தி ஆட்சியை கலைக்க கூடாது என்று தலையில் அடித்துக் கொண்ட தி.மு.க., இப்போது அந்த பிரிவை பயன்படுத்தி அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க கோருவது ஏன்?

அ.தி.மு.க. ஆட்சி நீடிக்க வேண்டும். முதல்-அமைச்சர் வேகமாக செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment