காரியாலயமொன்றின் மீது தாக்குதல், 3 பிக்குகள் உட்பட ஆறுபேர் கைது

228 0

கம்பஹாவிலுள்ள காரியாலயமொன்றை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மூன்று பிக்குகள் உட்பட ஆறுபேர் கம்பஹா பொலிஸாரினால் கைது நேற்று(15) நண்பகல் செய்யப்பட்டுள்ளனர்.

சிங்ஹலே ஜாதிக இயக்கத்தின் தலைவர் சாலிய ரி. ரணவகவின் கம்பஹா முதுன்கொட வீட்டில் இருந்த காரியாலயத்தை பலவந்தமாக உடைத்து, அக்காரியாலயத்தில் இருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்ஹலே அபி அமைப்பின் தலைவராகவுள்ள தேரர் உட்பட இன்னும் இரு தேரர்கள் அடங்களாக 6 பேர் கம்பஹா பொலிஸாரினால் நேற்று(15) நண்பகல் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா மேலதிக மஜிஸ்ட்ரேட் லலித் கன்னங்கர நேற்று பிற்பகல் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு அடையாள அணிவகுப்பொன்றிற்கு உட்படுத்துமாறு கம்பஹா மேலதிக மஜிஸ்ட்ரேட் லலித் கன்னங்கர, மஹர சிறைச்சாலை அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ராஜகிரிய, நாவல வீதி சத்ததம்ம ராஜித விகாரையின் விகாராதிபதியும், சிங்கஹலே அபி அமைப்பின் தலைவருமான ஜபுராவல சந்திரரத்ன தேரர், பல்லபெத்தே பிரேமாலோக தேரர், கந்தகம சுமேத வங்சாலங்கார தேரர் உட்பட ஏனைய மூவர் இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

கடந்த 11 ஆம் திகதி நண்பகல் கம்பஹா முதுன்கொட, கொடகெதரவிலுள்ள சாலியவின் வீட்டிலுள்ள காரியாலயத்துக்குள் பலவந்தமாக நுழைந்து சிலர் அக்காரியாலயத்திலுள்ள சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்துள்ளனர். இதன்போது, அவ்வீட்டில் சாலியவின் மனைவி, தாய் உட்பட பிள்ளைகளும் இருந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இன்னும் இடம்பெறவேண்டியுள்ளதனால், சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்தைக் கோரியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக முறைப்பாட்டாளர்கள் சந்தேக நபர்களை நன்கு அறிந்தவர்கள் என்பதனால், அடையாள அணிவகுப்பு நடாத்த அவசியமில்லையென சந்தேக நபர்கள் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணிகளான பெதும் கமகே, தசந்த இஹலகே, சந்துன் ரணசிங்க, சஞ்ஜய குணசேகர மற்றும் உபுல் குணசேகர ஆகியோர்  அடங்கிய குழு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

Leave a comment