ஜப்பான்- சீன அதிகாரப் போட்டிக்குள் சிக்கிக் கொள்ளுமா சிறிலங்கா?

590 0

Ranil-Japanசிறிலங்கா மீதான சீனாவின் செல்வாக்கு அதிகரித்துள்ள நிலையில், தற்போது ஜப்பானும் சிறிலங்கா மீதான தனது கவனத்தை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இலங்கைத் தீவின் கரையோர பாதுகாப்புச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஜப்பான் சாதகமான பங்களிப்பை வழங்கி வருவதன் மூலம் சிறிலங்கா மீதான தனது செல்வாக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கரையோரப் பாதுகாப்புத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கடந்த யூன் மாதம் 1.8 பில்லியன் யென்னை சிறிலங்கா அரசாங்கத்திடம் ஜப்பான் வழங்கியது. சிறிலங்காவின் கரையோரப் பாதுகாப்புப் படையின் திறனை மேலும் மேம்படுத்தும் நோக்குடனேயே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கப்பல்கள் பாதுகாப்பான போக்குவரத்தை மேற்கொள்வதை உறுதிப்படுத்துதல், கடற்கொள்ளையர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துதல், கடல் சார் வளங்கள் அழிக்கப்படுவதைத் தடுத்தல் போன்ற பல்வேறு நோக்கங்களுடன் ஜப்பானியத் திட்டமானது சிறிலங்காவில் செயற்படுத்தப்படுகிறது.

கரையோரப் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் நோக்குடன் வரையப்பட்ட இத்திட்டம் தொடர்பான உடன்படிக்கையானது கொழும்பில் வைத்துக் கைச்சாத்திடப்பட்டது. இந்த உடன்படிக்கையின் அடிப்படையில், சிறிலங்காவின் கரையோரப் பாதுகாப்பு வீரர்களுக்கு ஜப்பான் பயிற்சிகளை வழங்குவதற்கான ஏற்பாடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பானின் நகோயாவுக்குப் பயணம் செய்திருந்த வேளையில் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயுடனும் பேச்சுக்களை நடத்தியிருந்தார். இவ்விரு தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்களின் போது, ‘சட்ட ஆட்சியை அடிப்படையாகக் கொண்டு ஆழ்கடல் மற்றும் கரையோர சுதந்திரமான செயற்பாடுகளை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதன் முக்கியத்துவம்’ தொடர்பாக ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே எடுத்துரைத்திருந்தார்.

ஜப்பானியப் பிரதமர் இந்தக் கருத்தைத் தெரிவித்து ஒரு மாதத்தின் பின்னர் சிறிலங்காவுடனான கரையோரப் பாதுகாப்புத் திட்டம் தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டது.

சிறிலங்கா, பங்களாதேஸ் உட்பட தென்னாசியப் பிராந்திய நாடுகளின் கடல்சார் மேம்பாட்டுத் திட்டங்களை சீனா அமுல்படுத்தி வரும் அதேவேளையில், ஜப்பானியப் பிரதமர் சிறிலங்காவுடனான உடன்படிக்கை தொடர்பான அறிவித்தலை வெளியிட்டிருந்தார். சிறிலங்காவின் பிரதான வெளிநாட்டு நிதிவழங்கும் நாடுகளாக ஜப்பான் மற்றும் சீனா ஆகிய இரண்டும் காணப்படும் அதேவேளையில், கொழும்பானது இவ்விரு நாடுகளுடன் சமமான உறவைப் பேண முயற்சிக்கிறது.Ranil-Japan

சிறிலங்காவுடன் கடல்சார் ஒத்துழைப்பை வழங்குவதில் ஜப்பான் அதிக ஆர்வம் காண்பிக்கின்றது. இதன் விளைவாக 2009 தொடக்கம் ஜப்பானிய கரையோர தற்பாதுகாப்புப் படை மற்றும் ஜப்பான் கரையோரப் பாதுகாப்புப் படை ஆகியவற்றின் கப்பல்கள் 55 இற்கும் அதிகமான பயங்களை சிறிலங்காவுக்கு மேற்கொண்டுள்ளன.

சிறிலங்கா மற்றும் ஜப்பான் ஆகியவற்றுக்கு இடையிலான கரையோரப் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் கடல் சார் விவகாரங்கள் போன்றன தொடர்பான பேச்சுக்கள் இவ்வாண்டு ஜனவரி மாதம் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டன.

சிறிலங்காவின் கடற்பாதைகளின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரமான போக்குவரத்தை உறுதிப்படுத்துவதே ஜப்பானின் பிரதான நோக்கம் எனவும், சட்ட ஆட்சி நிலைபெற்றுள்ள கடற்பாதைகளில் திறந்த, பலமான கடல் மையம் ஒன்றை உருவாக்குவதே தமது விருப்பம் எனவும் சிறிலங்கா மற்றும் ஜப்பானிற்கு இடையில் இடம்பெற்ற பேச்சுக்களின் போது சிறிலங்காவிற்கான ஜப்பானியத் தூதுவர் கெனிச்சி சுகனுமா சுட்டிக்காட்டினார்.

சிறிலங்காவானது ஜப்பான் மற்றும் சீனாவுடன் நல்லுறவைப் பேணும் அதேவேளையில், இவ்விரு நாடுகளுடனும் தொடர்ந்தும் நல்லுறவைப் பேணுவதை சிறிலங்கா உறுதிப்படுத்துவதுடன், இந்திய மாக்கடலில் நிலவி வரும் முரண்பாடுகளைக் களைவதற்கான நடவடிக்கையையும் சிறிலங்கா முன்னெடுக்க வேண்டும் என கடல்சார் வல்லுனர் றொகான் மசக்கொரலா தெரிவித்தார்.

‘அனைவரும் ஒன்றிணைந்து இராஜதந்திரத் தீர்மானங்களை மேற்கொள்வதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். இதன்மூலம் மட்டுமே ஒவ்வொரு காலப்பகுதியிலும் எழும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். மாக்கடல்கள் மற்றும் கடல் சார் வளங்களை முகாமைத்துவம் செய்வதற்கான சட்ட ரீதியான வரையறையை அனைத்து நாடுகளும் இணைந்து முன்வைக்க வேண்டும்’ என ஆசியக் கப்பல் உரிமையாளர்கள் பேரவையின் செயலாளர் நாயகம் மசக்கொரலா தெரிவித்தார்.

சிறிலங்கா மீதான ஜப்பானின் செல்வாக்கு அதிகரிப்பிற்கான காரணம் தொடர்பாக மசக்கொரலாவிடம் வினவிய போது, ஆசியாவின் அதிகரித்து வரும் உள்ளகப் பிராந்திய வர்த்தகத்தின் பின்னணியில், சிறிலங்கா போன்ற கேந்திர முக்கியத்துவம் மிக்க நாடுகளின் பங்களிப்பானது உலகின் பலம் மிக்க நாடுகள் தமது வர்த்தக மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு மிகவும் அவசியமானதாகும் எனப் பதிலளித்தார்.wang-yi-colombo (3)

சிங்கப்பூர் போன்ற நாடுகளிடமிருந்து பிறநாடுகளுடனான உறவைச் சமவலுப்படுத்துவது தொடர்பான பாடங்களை சிறிலங்கா கற்றுக்கொள்ள வேண்டும் என மசக்கொரலா தெரிவித்தார்.

‘சிறிய நாடான சிறிலங்கா ஜப்பான் மற்றும் சீனாவுடன் மட்டுமன்றி சிங்கப்பூர் போன்று அனைத்துப் பிராந்திய மற்றும் அனைத்துலக வல்லரசு நாடுகளுடனும் சிறிலங்கா சமமான உறவைப் பேண வேண்டும். பூகோளப் பொருளாதாரம் மற்றும் அரசியலுக்குள் நாங்கள் எவ்வாறு எம்மைப் பொருத்திக் கொள்வது என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டுக்களில் சிங்கப்பூரும் ஒன்றாகும்’ என கொழும்பிலுள்ள கப்பல் உரிமையாளர்களின் நிறுவகத்திற்கான பிரதம நிறைவேற்று இயக்குனராகவும் பணியாற்றும் மசக்கொரலா தெரிவித்தார்.

சீனாவின் பட்டுப்பாதைத் திட்டமானது சீனாவிற்கு மட்டும் நன்மை அளிக்கவில்லை. இத்திட்டத்தின் கேந்திர முக்கியத்தும் மிக்க இடத்திலுள்ள சிறிலங்காவும் இதன்மூலம் பயன்பெற முடியும்.

‘முன்னேறிவரும் ஆபிரிக்கா உட்பட அனைத்துக் கண்டங்களுடனும் வர்த்தக சார் தொடர்பைப் பேணுவதற்கான பாரிய திட்டமாகவே சீனாவின் ஒரு பாதை ஒரு அணைத் திட்டம் காணப்படுகிறது. இதன் மூலம் கடல்வழி மற்றும் தரைவழி மூலம் புதிய சந்தை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும். சீனாவின் அதிகரித்து வரும் சனத்தொகை மற்றும் சக்திக்கான கேள்வி அதிகரிப்பு, வர்த்தகச் செயற்பாடுகள் அதிகரித்தமை போன்றனவே சீனாவின் இத்திட்ட நடைமுறையின் நோக்காகும்’ என மசக்கொரலா தெரிவித்தார்.

‘இந்த வகையில் சிறிலங்கா கடல் வழிகளில் தொடர்ச்சியான பாதுகாப்பு வளங்களை மேற்கொள்வதற்கான கேந்திர முக்கியத்துவம் மிக்க அமைவிடத்தைக் கொண்டுள்ளது. டுபாய் மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளின் மையத்தில் சிறிலங்கா அமைந்துள்ளதால் கடல் சார் மையமாக இது உருவாக்கப்படும். இதன்மூலம் வழங்கற் செலவு குறைவதுடன் கப்பல்கள் தரித்து நிற்பதற்கான வசதியும் காணப்படும். அத்துடன் இந்தியாவிற்கு ஹொங்கொங் போன்று எதிர்காலத்தில் சிறிலங்காவும் ஆசியாவிற்கான ஒரு நுழைவாயிலாக அமையும்’ என மசக்கொரலா சுட்டிக்காட்டினார்.

வழிமூலம் – ASIA TIMES
ஆங்கிலத்தில் – MUNZA MUSHTAQ
மொழியாக்கம் – நித்தியபாரதி