இலங்கைக்கு உதவிகளை வழங்க அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜப்பான் முன்வருகை

361 0

இலங்கையில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்காக அமெரிக்க, பிரிட்டன் மற்றும் ஜப்பான் தூதுவர்கள், வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை நேற்று சந்தித்தபோது இதனைத் தெரிவித்தாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அனர்த்த நிலைமையில் பல்வேறு துறைகள் ஊடாக ஒத்துழைப்பை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கெனிசி சுகனுமா தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்கும் எத்தகைய சந்தர்ப்பத்திலும் நிவாரணம் வழங்குவதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இயற்கை அனர்த்தம் தொடர்பான நிவாரண நடவடிக்கையில் இலங்கைக்கு பிரிட்டன் ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டுஹரிஸ் கூறியுள்ளார்.

இதேவேளை சார்க் அமைப்பின் செயலாளர் நாயகம் அம்ஜற் உசைன் பீ சாகிலும் வெளிவிகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்தாக அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்தியாவில் இருந்து வந்துள்ள வைத்தியக் குழு தங்களின் மருத்துவ சேவைகளை ஆரம்பித்துள்ளது.

வெள்ளப்பாதிப்பிற்கு உள்ளான மக்களின் நிவாரணப் பணிகளின் நிமித்தம், இந்தியாவைச் சேர்ந்த வைத்தியர் குழு ஒன்று இலங்கை வந்துள்ளது.

அவர்கள் களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்து சேவைகளை வழங்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்தியா மூன்று கப்பல்களில் இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளதுடன், சீனாவும் 2.2 மில்லியன் டொலர்கள் பெறுமதியான உதவியை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.