தமிழர்களின் தொல்பொருள் அடையாளங்களை மாற்ற பௌத்த குருமார்கள் முயற்சி

375 0

நல்லாட்சி எனக் கூறிக்கொண்டாலும், தமிழர்களுக்கு எதிராக மறைமுகமாக பல்வேறு சதி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கில் தமிழர்களின் தொல்பொருள் அடையாளங்களை மாற்றுவதற்கு அரசாங்கத்துடன் இணைந்து பௌத்த குருமார்கள் மிகத் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அம்பாறை – கல்முனை சேனைக்குடியிருப்பு சிவநெறி அறப்பணி மன்றம் நடாத்தும், வேப்பையடி பிள்ளையார் அறநெறி பாடசாலை கட்டடத்திறப்பு விழா, 15 ஆம் கிராம வேப்பையடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் சிவநெறி அறப்பணி மன்றத்தலைவர் சைவ வித்தகர் யோ. கஜேந்திரா தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், வடக்கு கிழக்கு மாகாணத்தில் இந்து ஆலயங்கள் பல தொல்பொருட்கள் உள்ளதாகக்கூறி அழிக்கப்பட்டு வருவதாகவும், பௌத்த விகாரைகள் பல உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கிலுள்ள பெருந்தொகையான இடங்களில் தொல்பொருட்கள் உள்ளதாக கல்வியமைச்சர் உறுதிப்படுத்தியிருப்பதாகக் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,

தொல்பொருள் இருக்கும் இந்துக்களின் ஆலயங்கள் அழிக்கப்பட்டு, பௌத்த விகாரைகள் பெரிதளவில் கட்டப்பட்டு வருவதாகவும், இதுவென்ன சட்டம் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஆகவே, தமிழர்களுக்கு அநீதி விளைவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்தக் துர்ப்பாக்கிய காலகட்டத்தில், அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.