பொலிஸ் மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடு செய்யலாம்: 2026 இல் மேம்படுத்தப்பட்ட ‘‘Tell IGP’ சேவை!

10 0

நாட்டில் குற்றச்செயல்களைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பொலிஸ் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட “Tell IGP” (பொலிஸ் மா அதிபருக்குக் கூறுங்கள்) எனும் இணையவழி முறைப்பாட்டுச் சேவை 2026ஆம் ஆண்டிலும் புதிய மேம்படுத்தல்களுடன் செயற்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் ஊடாக, பொதுமக்கள் தமக்கு ஏற்படும் அசௌகரியங்கள் அல்லது அவசர சம்பவங்கள் குறித்து நேரடியாக பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல முடியும்.

இச்சேவையின் ஊடாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் முறைப்பாடுகளைப் பதிவு செய்யலாம்.

இதனூடாக, திட்டமிடப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல்கள், ஊழல் மோசடிகள், போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்கள் குறித்துத் தெரிவிக்கலாம்.

இதன்மூலம் பதிவு செய்யப்படும் முறைப்பாடுகள் அந்தந்தப் பிரிவுகளுக்குப் பொறுப்பான அத்தியட்சகர்கள் ஊடாக உரிய பொலிஸ் நிலையங்களுக்கு உடனடியாக அனுப்பப்பட்டு, விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்.

அத்துடன், இங்கு வழங்கப்பட்ட தீர்வுகளில் திருப்தி இல்லையெனில், மீண்டும் இணையவழியில் பொலிஸ் மா அதிபருக்குத் தெரியப்படுத்தும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள்,  முறைப்பாடுகளை  https://telligp.police.lk  இணையத்தளத்தினுடாகவும்  telligp@police.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவும், தெரிவிக்கமுடியும்.

ஊழலற்ற மற்றும் பாதுகாப்பான சமூகத்தைக் கட்டியெழுப்ப இந்தச் சேவையைப் பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.