உலக பத்திரிகை புகைப்படக்கண்காட்சி கொழும்பில் ஆரம்பமானது

15 0

2025 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை புகைப்படக்கண்காட்சியை கொழும்பு, ஒன்கோல் பேஸ் மோல் வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (27) வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன ஆரம்பித்து வைத்தார்.
இந்த புகைப்படக்கண்காட்சியை நெதர்லாந்து  தூதரகம், இலங்கை பத்திரிகை நிறுவனத்துடன் இணைந்து நடத்துகிறது.

கொழும்பு, ஒன்கோல் பேஸ் மோல் வளாகத்தில்  இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த கண்காட்சியை மார்ச் மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை பார்வையிடலாம். இதனை தொடர்ந்து மார்ச் மாதம் 13 ஆம் திகதி  வெள்ளிக்கிழமை முதல்  17ஆம் திகதி திங்கட்கிழமை வரை கண்டியில் சஹஸ் உயன மண்டபத்திலும் பார்வையிடலாம்.

141 நாடுகளிலிருந்து 3,778 புகைப்படக் கலைஞர்கள் சமர்ப்பித்த கிட்டத்தட்ட 60,000 புகைப்பட பதிவுகளை 31 புகைப்பட ஊடகவியலாளர்களை கொண்ட பிராந்திய மற்றும் உலகளாவிய நடுவர் குழுக்கள் கவனமாக மதிப்பாய்வு செய்துள்ளன.

அவற்றில்  2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த உலக பத்திரிகை புகைப்படங்களாக 42 புகைப்படக் கலைஞர்களின் புகைப்படைப்புகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் 30 பேர் தங்கள் சொந்த நாடுகளின் கதைகளை புகைப்படம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.