இருதரப்பு உறவுகளை புதிய தரத்திற்கு கொண்டு செல்ல ஊடகங்கள் பங்களிக்க வேண்டும்

11 0

இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு (UAE) இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் காலித் நாசர் அல்அமெரி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நட்பு ரீதியில் ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே இதனைக் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கிடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை வலியுறுத்திய தூதுவர், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கிடையே மக்களுக்கும் மக்களுக்குமான தொடர்பை (People-to-People Contact) மேலும் விரிவுபடுத்துவதில் தனக்கு அதிக ஆர்வம் உள்ளதாக தெரிவித்தார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் சுமார் 3 இலட்சம் இலங்கை தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாகவும், அவர்கள் தங்களது துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு வர்த்தகம் அமெரிக்க டொலர் 1.1 பில்லியன் அளவில் உள்ளதாக தெரிவித்த அவர், தினமும் சுமார் 17 நேரடி விமானப் பறப்புகள் இடம்பெறுவதாகவும் கூறினார்.

மேலும், இலங்கையை அரபு சுற்றுலாப் பயணிகளுக்கான முக்கிய இடமாக மேம்படுத்துவதற்காக இரு நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதை அவர் நினைவுபடுத்தினார்.

அதேவேளை, பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக கடந்த இரண்டு ஆண்டுகளில் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்ட 14 இலங்கை குற்றவாளிகளை ஐக்கிய அரபு இராச்சியம் இலங்கைக்கு ஒப்படைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“இந்துச் சமுத்திரத்தில் மறைந்துள்ள முத்து இலங்கை. இலங்கையில் மேலும் பல முக்கிய வளங்கள் மற்றும் வாய்ப்புகள் மறைந்து காணப்படுகின்றன. அவற்றை வெளிக்கொணர கூட்டு முயற்சி மேற்கொள்ள வேண்டும்,” என தூதுவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய அரபு இராச்சியம் ஒரு முக்கிய உலக மையமாக விளங்குவதாகவும், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கிடையே தினமும் அதிகளவிலான விமான மற்றும் கடல் போக்குவரத்து நடைபெற்று வருவது இருதரப்பு உறவுகளின் வலிமையை காட்டுகின்றது எனவும் அவர் கூறினார்.

செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் ஐக்கிய அரபு இராச்சியம் ( UAE ) குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்த தூதுவர், “செயற்கை நுண்ணறிவு எந்தத் தொழிற்துறையையும் இல்லாதொழிக்கும் என்று கூற முடியாது. அதனை பயன்படுத்தி தொழில்களை எவ்வாறு இலகுவாக்கலாம் என்பதே முக்கியம்” என வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பு ஊடகங்களுக்கும் தூதரகத்திற்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதோடு, இலங்கை – ஐக்கிய அரபு இராச்சிய உறவுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டதாகும்.