சமூக சக்தியென்பது கட்சியை வலுப்படுத்தும் அரசியல் ஆயுதம் அல்ல. அது வறுமையை ஒழிப்பதற்குரிய கூர்மையான ஆயுதமாகும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். எனவே, எல்லா விடயங்களிலும் எதிர்ப்பு அரசியல் நடத்தாமல், வறுமை ஒழிப்பு உள்ளிட்ட விடயங்களில் இணைந்து பணியாற்ற முன்வருமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் இவ்வாண்டுக்கான முதலாவது காலாண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் குழுவின் இணைத் தலைவரும் வடக்கு மாகாண ஆளுநருமான நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் புதன்கிழமை (25) கிளிநொச்சி மாவட்டச் செயலகத் திறன் அபிவிருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்டத்தின் முன்னேற்றத்துக்கான பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக விரிவான ஆலோசனைகள் இதன்போது மேற்கொள்ளப்பட்டது.
அடிப்படை வசதிகள் மேம்பாடு, மீன்வளத் துறை வளர்ச்சி, குடிநீர் வசதி, வீதி அமைப்பு, விவசாயம் மற்றும் இளைஞர் தொழில் வாய்ப்புகள் போன்ற முக்கிய துறைகள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டது. குறிப்பாக “சமூக சக்தி” திட்டம் குறித்து கூட்டத்தில் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
சில நாடாளுமன்ற உறுப்பினர்களும், உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகளும், குறித்த திட்டத்தின் செயல்முறை மற்றும் அதன் நடைமுறைப்படுத்தல் குறித்து வினாக்களை தொடுத்தனர்.
குறிப்பாக, இந்தத் திட்டம் அரசியல் நோக்கத்துடன் பயன்படுத்தப்படுகின்து என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. எனினும், அதற்கு பதிலளித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,
சமூக சக்தி” திட்டம் எவ்விதத்திலும் ஒரு கட்சியை வலுப்படுத்தும் அரசியல் முயற்சி அல்ல என்று தெளிவுபடுத்தினார். இது வறுமை ஒழிப்பு, சுயதொழில் மேம்பாடு மற்றும் சமூகத்தின் பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் திட்டமாகும்.
சமூகத்தின் பின்தங்கிய தரப்பினருக்கு நேரடி நன்மை ஏற்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படும், வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும். வடக்கு மாகாணத்தை எல்லா வழிகளிலும் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அர்ச்சுனா இராமநாதன் ஆகியோர் உட்பட வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் பலரும் கலந்து கொண்டனர்.

