விஜித ஹேரத்துடன் போர்த்துகல் அமைச்சர் பேச்சுவார்த்தை

13 0

போர்த்துகல் வசமுள்ள இலங்கைக்குச் சொந்தமான வரலாற்றுப் பெறுமதிமிக்க தொல்பொருட்களை மீண்டும் நாட்டுக்குக் கொண்டு வருவது தொடர்பான முதற்கட்ட ஆய்வுகளை முன்னெடுக்க கூட்டுக்குழுவொன்றை அமைக்க போர்த்துகல் வெளிவிவகார அமைச்சர் பாலோ ரஞ்சல் (Paulo Rangel) இணக்கம் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் அமைச்சர் விஜித ஹேரத்துடன் இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டது.

போர்த்துக்கேயர் ஆட்சியின் போது இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட தொல்பொருட்களை மீள ஒப்படைக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட போர்த்துகல் அமைச்சர், இது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய முன்மொழிவு எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார ஒப்பந்தத்தை அமுல்படுத்தி பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

போர்த்துகல் விசாவைப் பெறுவதற்கு இலங்கையர்கள் புதுடில்லிக்குச் செல்ல வேண்டியிருப்பதால் ஏற்படும் அசௌகரியங்களைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் விஜித ஹேரத், இலங்கையிலேயே விசா வசதிகளைப் பெற்றுக்கொள்ள இலகுவான பொறிமுறையொன்றை உருவாக்குமாறு கோரிக்கை விடுத்தார். இது குறித்து ஆராய்வதாக பாலோ ரஞ்சல் உறுதியளித்தார்.

புதுப்பிக்கத்தக்க சக்தி, வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இரு அமைச்சர்களும் இணக்கம் கண்டனர். அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையில் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பைத் தொடரவும் உறுதியளிக்கப்பட்டது.

இலங்கையில் ஏற்பட்ட ‘தித்வா’ (Dithwa) சூறாவளியைத் தொடர்ந்து போர்த்துகல் வழங்கிய அவசர நிவாரண உதவிகளுக்கு அமைச்சர் விஜித ஹேரத் தனது நன்றியைத் தெரிவித்தார். அத்துடன், மீளக்கட்டியெழுப்பும் பணிகளுக்கும் போர்த்துகல்லின் தொடர்ச்சியான ஆதரவை அவர் இதன்போது கோரினார்.