முழு நாடும் ஒன்றாக – தேசிய போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தின் கீழ் இதுவரையில் 5000 கிலோ கிராமுக்கும் அதிக போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, 102 900 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 15 இலட்சத்துக்கும் அதிகமான தனிநபர் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் எப்.யூ.வூட்லர் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (24) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட முழு நாடும் ஒன்றாக – தேசிய போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தின் கீழ் இதுவரையில் 526 கிலோ 603 கிராம் ஹெரோயின் மற்றும் அதனுடைய தொடர்புடைய 34 360 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1419 கிலோ 121 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 38 423 சந்தேகநபர்களும், 3548 கிலோ கிராம் கஞ்சாவுடன் 24 244 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 9 இலட்சம் போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக கடந்த 4 மாதங்களில் ஒரு இலட்சத்து இரண்டாயிரத்து 900 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேநபர்களிடமுள்ள சட்ட விரோத சொத்துக்கள் குறித்த 144 விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் 2018 தடுப்புக்காவல் உத்தரவுகளும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இவை தவிர சுமார் 15 இலட்சத்துக்கும் அதிகமான தனிநபர் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவற்றின் மூலம் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 1036 சந்தேகநபர்களும், நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 24 813 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மதுபோதையில் வாகனம் செலுத்திய 21 736 சாரதிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் சுமார் 3500 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2024, 2025 மற்றும் 2026 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த 29 சந்தேகநபர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அத்தோடு சர்வதேச பொலிஸ் சிவப்பு அறிவித்தல் அற்ற மேலும் 13 சந்தேகநபர்களும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சர்வதேச பொலிஸ் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள மேலும் 89 சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
2024இல் 1400 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சட்ட விரோத சொத்துக்களும், 2025இல் 1549 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சட்ட விரோத சொத்துக்களும், இவ்வாண்டில் கடந்த ஒன்றரை மாதங்களில் 50 மில்லியன் பெறுமதியான சட்ட விரோத சொத்துக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 2025இல் ஜனவரி – டிசம்பர் வரை 74 டி-56 ரக துப்பாக்கிகளும், 90 பிஸ்டல் ரக துப்பாக்கிகளும், 63 ரிவோல்வர் ரக துப்பாக்கிகளும் உள்ளடங்களாக 2414 ஆயுதங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
இவ்வாண்டில் 3 டி-56 ரக துப்பாக்கிகளும், 4 பிஸ்டல் ரக துப்பாக்கிகளும், 10 ரிவோல்வர் ரக துப்பாக்கிகளும் உள்ளடங்களாக 237 ஆயுதங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்தும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

