நாட்டில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அரசாங்கம் அந்த பிரச்சினைகளுக்கு பதில் தேடாமல் இன மத மோதல்கள் பிளவுகளை ஏற்படுத்தி பிரித்தாளும் தந்திரத்தின் மூலம் ஆட்சி செய்து கொண்டிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சுமத்தினார்.
மேற்கு குப்பியாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இன்று நாடு பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது. ஒரு புறத்தில் அபிவிருத்தியடைந்து வரும் நாட்டில் இருக்கவேண்டிய சமூக ஒழுக்கம், நாகரிகம் மற்றும் பண்பாடு என்பன எமது நாட்டில் மறைந்து வருகின்றன.
வாக்குகளைப் பெற்று அதிகாரத்துக்கு வந்து பொறுப்புகள் வகிக்கும் அமைச்சர்கள் மதத் தலைவர்களை அவமதித்து, விலங்குகளின் பெயர்களைப் பயன்படுத்தி அவர்களை இழிவுபடுத்திக் கொண்டிருக்கின்றனர்.
சகல மதத் தலைவர்களுக்கும் சமூகத்தில் உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும். புத்த சாசனத்தை பாதுகாத்து போஷிப்பது நம்மனைவரினதும் பொறுப்பாகும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
அதை நிறைவேற்ற வேண்டியது நாட்டு மக்களினதும் அரசாங்கத்தினதும் கடமையாகும். பௌத்தம் மாத்திரமின்றி ஏனைய மதங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கும் உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும்.
இதனை தேசியக் கொள்கையாகப் பின்பற்றியதால் தான் ரணசிங்க பிரேமதாச புத்த சாசன அமைச்சையும், சக மதங்களுக்கான இராஜாங்க அமைச்சுக்களையும் உருவாக்கினார். அனைத்து மதங்களையும் பாதுகாப்பது நாட்டின் பொறுப்பாக இருந்தாலும், தற்போதைய அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் பௌத்த தேரர்களையும் கடுமையாக விமர்சிக்கின்றனர்.
ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தான் விரும்பும் எந்த மதத்தையும் நம்பி பின்பற்றும் உரிமை காணப்படுகின்றது. மதமற்றவராக இருப்பதற்கு மக்களுக்கு உரிமை இருந்தாலும் அதை வலுக்கட்டாயமாக பிறர் மீது திணிக்கக்கூடாது. இந்த அனைத்து உரிமைகளுக்கும் சுதந்திரம் வழங்குவது அனைவரதும் பொறுப்பாகும்.
மகா சங்கரத்னத்தினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் விமர்சனங்களை நிறுத்துமாறும், அனைத்து மதத் தலைவர்களையும் இலக்காகக் கொண்டு நடத்தப்படும் இழிவான சேறு பூசும் கீழ் தர நடவடிக்கைகளை நிறுத்துமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன். இவற்றை நிறுத்தி விட்டு நாடு முகம் கொடுத்து வரும் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்குமாறு வலியுறுத்துகின்றோம்.
இன்று நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகின்றன. இது குறித்து நான் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பிய போது, அவ்வாறு எவ்வித தட்டுப்பாடும் இல்லை என்று அமைச்சர்கள் கூறுகின்றனர். ஆனால் தற்போது மக்கள் எரிவாயுவுக்கான வரிசையில் நிற்கின்றனர். இந்நிலையில் தற்போது ஆடை தொழிற்சாலைகள் பல மூடப்படும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவற்றுக்கு அரசாங்கத்திடம் எவ்வித பதிலும் இல்லை.
அரசாங்கம் இவ்வாறான பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்தாமல், இன மத மோதல்கள் பிளவுகளை ஏற்படுத்தி பிரித்தாளும் தந்திரத்தின் மூலம் ஆட்சி செய்யும் கொள்கையையே முன்னெடுத்து வருகின்றனது. இப்போதாவது இந்த பிற்போக்குவாதங்களை நிறுத்தி விட்டு, மக்களின் தேவைகளுக்கு தீர்வுகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.

