கண்டியில் மாணிக்கக்கல் வாரச்சந்தை ஆரம்பம்

14 0

கண்டியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இரத்தினக்கல் வாரச்சந்தையில் பெருமளவிலான வர்த்தகர்களும் கொள்வனவாளர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு வருகின்றனர். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விசேட சந்தை நடைபெற்று வருகின்றது.

இச்சந்தையில் கண்டி, குருணாகல், கேகாலை, மாத்தளை, பொலன்னறுவை மற்றும் மொணராகலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அநேக வர்த்தகர்களும் கொள்வனவாளர்களும் கலந்துகொண்டு தமது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கண்டி மாநகர சபை உட்பட அரச நிறுவனங்கள் இந்த முயற்சிக்கு முழுமையான ஆதரவை வழங்கி வருவதாக மாணிக்கக்கல் வர்த்தகர் பிரேமராஜ் முத்துக்குமார் தெரிவித்தார். கண்டியைப் பொறுத்தவரை இவ்வாறான வாரச்சந்தை ஒரு புதிய அனுபவமாக அமைந்துள்ளதெனப் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.

மாணிக்கக்கல் வர்த்தகம் நடைபாதை வர்த்தகமாக இடம்பெறும் இந்த வாரச்சந்தையின் ஒரு பகுதியைப் படத்தில் காணலாம்.