இயற்கை அனர்த்தம் – பலி எண்ணிக்கை 151ஆக உயர்வு

1032 0

இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 151 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அனர்த்தங்களினால் 111 பேர் காணாமல் போயுள்ளனர்.

வெள்ளம், மண்சரிவு, காற்று காரணமாக ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 565 குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 38 ஆயிரத்து 295 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதுபோல் 20 ஆயிரத்து 670 குடும்பங்களைச் சேர்ந்த 86 ஆயிரத்து 316 பேர் 290 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இயற்கை அனர்த்தங்களில் அதிகளவிலான மரணங்கள் இரத்தினபுரி மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கு 71 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் 43 பேர் பலியானதுடன், 68 பேர் காணாமல் போயுள்ளனர்.

மாத்தறை மாவட்டத்தில் 14 பேர் பலியாகியுள்ளனர். 15 பேர் காணாமல் போயுள்ளனர்.

காலி மாவட்டத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

ஹம்பாந்தோட்டையில் 5 பேர் பலியாகினர்.

கம்பஹா மாவட்டத்தில் 3 பேர் பலியானதுடன், 5 பேர் காணாமல் போயுள்ளனர்.

கேகாலை மாவட்டத்தில் இரண்டு பேர் அனர்த்தத்தினால் மரணித்துள்ளதுடன், மூன்று பேர் காணாமல் போயுள்ளனர்.

அத்துடன், கேகாலை – தெய்யோவிட்ட – தலப்பிடி தோட்டத்தில் நேற்று மண்சரிவு சம்பவம் ஒன்று இடம்பெற்றதையடுத்து, இந்த பகுதியில் உள்ள மக்கள் இரவோடு இரவாக இடம்பெயர்ந்து தற்போது சிறுவர் பாராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் அண்ணாமலை பாஸ்கரன் தெரிவித்தார்.

16 குடும்பங்களை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டவர்களே இவ்வாறு இடம்பெயந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.