நீர்கொழும்பிலிருந்து கடற்தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்

14 0

நீர்கொழும்பு, தூவ படகுத்துறையிலிருந்து கடந்த 9ஆம் திகதி கடற்தொழிலுக்குச் சென்ற மீனவர்கள், கடற்படையினரால் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மீனவர்கள் பயணித்த ‘ரோலர்’ படகில் போதைப்பொருள் இருக்கின்றதா எனச் சோதனையிட்ட பின்னரே, இரு மீனவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். ‘மது குமாரி’ என்ற படகில் தொழிலுக்குச் சென்ற ஆறு மீனவர்களில், படகின் ஓட்டுநர் (Skipper) மற்றும் அவரது உதவியாளர் ஆகிய இருவருமே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,

கடந்த 9ஆம் திகதி பிற்பகல் 3 மணியளவில் குறித்த மீனவர்கள் அறுவரும் தூவ படகுத்துறையிலிருந்து கடலுக்குச் சென்றுள்ளனர். தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, படகின் ஓட்டுநருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் மீன்பிடிக்காமல் மீண்டும் கரை நோக்கித் திரும்பியுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் திரும்பி வந்துகொண்டிருந்தபோது, கடந்த சனிக்கிழமை (21) இரவு 8.30 மணியளவில் அவர்களது படகைக் கடற்படையினர் தடுத்து நிறுத்திச் சோதனை செய்துள்ளனர். பின்னர், படகின் ஓட்டுநரையும் மேலும் இரு மீனவர்களையும் கடற்படையினரின் படகுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து ஓட்டுநரான டப்ளியு. லக்ஷ்மன் பெர்னாந்து மற்றும் உதவியாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (22) ஏனைய மூவரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. எனினும், அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை. அன்றைய தினம் பிற்பகல் 1.30 மணியளவில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை (24) காலை 7 மணியளவில் நீர்கொழும்பு தூவ படகுத்துறையை வந்தடைந்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக அகில இலங்கை பல நாள் மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டீரோன் மெண்டிஸ் மற்றும் படகின் உரிமையாளர் வின்சன் மைக்கல் பெர்னாந்து ஆகியோர் கருத்துத் தெரிவிக்கையில்;

“படகில் போதைப்பொருள் எதுவும் கைப்பற்றப்படாத நிலையில், அப்பாவி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையானது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.