மாகாணசபைத் தேர்தல் முறைமை: விசேட செயற்குழு மீது நம்பிக்கை இல்லை – இந்திக அனுருத்த

5 0

மாகாணசபைத் தேர்தல் முறைமையில் சட்ட சிக்கலை ஏற்படுத்த நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிக்கு மக்கள் விடுதலை முன்னணியினர்  முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்கள். மாகாணசபைத் தேர்தலை எந்த தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என ஆராய்ந்து அறிக்கை  சமர்ப்பிப்பதற்காக அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள விசேட செயற்குழு மீது நம்பிக்கை கிடையாது எனஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இன்று நடுத்தர மக்களுக்கு எதிராக செயற்படுகிறது. நடுத்தர  மக்கள் எதிர்க்கொள்ளும் எவ்வித பிரச்சினைகளுக்கும் இதுவரையில் தீர்வு முன்வைக்கப்படவில்லை.

எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். தரமற்ற நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.இதனால் எதிர்வரும் காலங்களில் மின்விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக் கூடும்.தரமற்ற நிலக்கரி கொள்வனவினால் ஏற்பட்ட நட்டத்துக்கு யார் பொறுப்புக்கூறுவது.

ஊழலுக்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தில் ஊழல் மோசடிகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்த நிலையில் காணப்படுகிறது. நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.

ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கை 65 சதவீதமளவில் உயர்வடைந்துள்ளதாக தற்போது குறிப்பிடப்படுகிறது. அவ்வாறாயின் மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் உடன் நடத்தலாமே.அரசாங்கத்திடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது. ஆகவே எல்லை நிர்ணய பிரச்சினைக்கு ஒருவாரத்துக்குள் தீர்வு கண்டு, தேர்தலை நடத்தலாம்.

மாகாணசபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறையில் நடத்துவது என்று ஆராய்ந்து விதப்புரைகள் மற்றும்  யோசனைகளை முன்வைப்பதற்கு வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு புதிய தேர்தல் முறைமை ஊடாக மாகாணசபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அப்போதைய நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உட்பட மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சட்டசிக்கல்களினால் மாகாணசபைத் தேர்தல்கள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டது.மக்கள் விடுதலை முன்னணியினர் மாகாணசபை முறைமைக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தார்கள். ஆகவே அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையிலான குழு மீது நம்பிக்கை கிடையாது என்றார்.