அரச நிர்வாக சேவையின் அதிகாரி ஒருவரை புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளராக நியமித்துள்ளதால் புகையிரத சேவையில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. தித்வா புயல் தாக்கத்தால் மற்றும் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட புகையிரத பாதைகள் மற்றும் பாலங்களை விரைவாக புனரமைத்து, புகையிரத சேவையை வினைத்திறனாக்குவதற்கு பொதுமுகாமையாளர் பதவியில் சேவையாற்றி ஓய்வுப்பெற்ற பொறியியலாளர்களை உள்ளடக்கிய குழுவை நியமிக்குமாறு வலியுறுத்துகிறோம். மலையக புகையிரத சேவையை மீள ஆரம்பிப்பதற்கு புனரமைப்பு பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கசுன் சாமர வலியுறுத்தியுள்ளார்.
புகையிரத நிலைய அதிபர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தித்வா புயல் தாக்கத்தால் ஏனைய அரச திணைக்களங்களை காட்டிலும் புகையிரதத் திணைக்களம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது.இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு பாரியதொரு பங்களிப்பு வழங்கும் மலையக புகையிரத பாதை மிக மோசமாக சேதமடைந்துள்ளது.பிரதான புகையிரத பாதையில் றம்புக்கனை புகையிரத நிலையத்துக்கு அப்பால் புகையிரத சேவை முன்னெடுக்கப்படாத காரணத்தால் பொதுப்பயணிகள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளார்கள்.இதனால் புகையிரதத்துக்கு ஒரு மாதத்துக்கு செலவழித்த பணத்தை, பேருந்து சேவையை பயன்படுத்துவதால் ஓரிரு நாட்களுக்கு செலவழிக்க வேண்டிய நிலைக்கு பயணிகள் தள்ளப்பட்டுள்ளார்கள்.இதனால் பொதுபயணிகள் பொருளாதார ரீதியிலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
சேதமடைந்த பேராதனை புகையிரத பாலத்தை புனரமைப்பதற்கு அரசாங்கம் ஆரம்பத்தில் இரட்டை பாலத்தை நிர்மானிப்பதற்கு யோசனை முன்வைத்திருந்தாலும்,பின்னர் பழைய பாலத்தை புனரமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு, அதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.இவ்வாறான நிலையில் கண்டிக்கான புகையிரத சேவையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பிப்பதாக அரசாங்கம் குறிப்பிட்டது. இருப்பினும் தொழில்நுட்ப நெருக்கடிகள், சீரற்ற காலநிலை ஆகிய காரணிகளால் பேராதனை புகையிரத பாலம் நிர்மாணிப்பு பணிகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.ஆகவே இந்த பாலத்தை புனரமைப்பது தொடர்பில் மீண்டும் ஒரு அறிக்கையை புகையிரத திணைக்களம் உரிய தரப்பினர்களிடம் கோரியுள்ளது.
றம்புக்களை முதல் கடுவன்னாவ வரையினால புகையிரத பாதத்தை புனரமைப்பதற்கு இதுவரையில் எவ்வித திட்டங்களும் தயாரிக்கப்படவில்லை.புகையிரத வீதி பராமரிப்பு, புகையிரத சேவையை வினைத்திறனாக்குவது உள்ளிட்ட சகல பணிகளும் தற்போது நெருக்கடிக்குள்ளாகியுள்ளன.
புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளரின் செயற்பாடுகள் முரண்பட்டதாக காணப்படுகிறது.புகையிரத போக்குவரத்து சேவையை குறைத்துவிட்டு புகையிரத திணைக்களம் இலாபமடைகிறது என்று பொதுமுகாமையாளர் குறிப்பிடுகிறார்.சக அதிகாரிகளின் ஆலோசனைகளை பெறாமல் இவர் தன்னிச்சையாக செயற்படுவதால் அரசாங்கமும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதுடன், பொதுபயணிகளும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள்
அரச நிர்வாக சேவையின் அதிகாரி ஒருவரை புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளராக நியமித்துள்ளதால் இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.தித்வா புயல் தாக்கத்தால் மற்றும் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட புகையிரத பாதைகள் மற்றும் பாலங்களை விரைவாக புனரமைத்து, புகையிரத சேவையை வினைத்திறனாக்குவதற்கு பொதுமுகாமையாளர் பதவியில் சேவையாற்றி ஓய்வுப்பெற்ற பொறியியலாளர்களை உள்ளடக்கிய குழுவை நியமிக்குமாறு வலியுறுத்துகிறோம்.

