எகிப்தில் வீதியில் சென்ற பஸ்ஸின் மீது மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 28 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை எகிப்து தலைநகரமான கெய்ரோவில் இருந்து 250 கி.மீ தூரத்தில் உள்ள மனியா என்ற நகரிலேயே மேற்படித் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அன்பா சாமுவேல் என்ற கிறிஸ்தவ மடாலயத்திற்கு பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்த போதே சில மர்ம நபர்கள் பஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் இதில் 28 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன் 25 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எகிப்து இராணுவம் ஐ.எஸ். இயக்கம் மீது தாக்குதல்களை நடத்தத் தொடங்கியது.
அதன்படி, லிபியாவில் உள்ள ஐ.எஸ் இயக்கத்தினரின் மறைவிடங்களை குறிவைத்து வான் தாக்குதல் நடத்துவதற்காக எகிப்து போர் விமானங்கள் புறப்பட்டுச் சென்றன. இந்த தகவல்களை வீடியோவாக எகிப்து இராணுவ செய்தி தொடர்பாளர் தாமர் எல்-ராபே தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

முன்னதாக கோப்டிக் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருந்த எகிப்து அதிபர் அப்டெல் பதாஃ எல்-சிசி தீவிரவாதிகளின் முகாம்கள் அனைத்தையும் அழிக்க வேண்டும் என இராணுவத்தினருக்கு தான் உத்தரவிட்டிருந்ததாக தெரிவித்திருந்தார். அத்துடன் இத்தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ‘இரக்கமற்ற படுகொலை’ என விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

