ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அறிவிப்பு

14 0

பல நாடுகளில் புலம்பெயர்ந்தோர் மோசமாக நடத்தப்படுகிறார்கள். ஆனால், தேவை என்று வரும்போது, அரசாங்கங்களுக்கு அவர்களை விட்டால் யாருமில்லை என்னும் நிலை உள்ளதை மறுப்பதற்கில்லை!

புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு

ஜேர்மனியைப் பொருத்தவரை, ஏஞ்சலா மெர்க்கல் சேன்ஸலராக இருந்தபோது பல்லாயிரக்கணக்கான அகதிகளை இருகரம் நீட்டி வரவேற்றார் அவர். ஆனால், இப்போது நிலைமை அப்படியில்லை. புலம்பெயர்தல் அரசியலாகிவிட்டதால், ஆளும் கூட்டணி அரசு புலம்பெயர்ந்தோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது.அவற்றில் ஒன்று, புகலிடக்கோரிக்கையாளர்களை, எல்லையிலேயே திருப்பி அனுப்புவதாகும்.

ஆனால், நாட்டில் வேலை செய்ய ஆட்கள் வேண்டுமே. ஆக, வேறு வழியில்லாமல் புகலிடக்கோரிக்கையாளர்களின் உதவியையே நாடவேண்டிய நிலைமை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

ஆம், புகலிடக்கோரிக்கையாளர்களை பணியாளர் சந்தைக்குள் விரைவாக கொண்டுவர அரசு திட்டமிட்டுவருவதாக ஜேர்மன் உள்துறை அமைச்சரான அலெக்சாண்டர் (Alexander Dobrindt) தெரிவித்துள்ளார். நேற்று ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த அவர், புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு உடனடி பணி வழங்கும் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதாவது, புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு மூன்று மாதங்களுக்குள் ஜேர்மனியில் வேலை வழங்க அரசு திட்டம் வைத்துள்ளதாக அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.

விடயம் என்னவென்றால், புலம்பெயர்ந்தோர் புகலிடக்கோரிக்கைக்கு விண்ணப்பித்து, அவர்களுடைய புகலிடக்கோரிக்கை பரிசீலனையில் இருக்கும்போதே அவர்கள் வேலை செய்வதைத் தொடங்கலாமாம்.