யூரி தோட்டத் தொழிலாளர்கள் இன்று திங்கட்கிழமை (23) கவனயீர்ப்பு பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். கடந்த காலங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக யூரி தோட்டப் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். இதன்விளைவாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மக்கள் வசிக்கும் பகுதிகள் பெரிதும் சேதமடைந்ததுடன், தோட்டத்தில் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலை, ஆலயம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளன. இருப்பினும், இதுவரை உரிய புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர்.
தற்போது யூரி தோட்டப் பாடசாலை பாதுகாப்பற்ற நிலையில் செயல்பட்டு வருவதாகவும், மாணவர்களின் பாதுகாப்பு கடுமையாக கேள்விக்குறியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனவே, பாதுகாப்பான தோட்டக் காணிகளை அரசாங்கத்தின் மூலம் சட்டபூர்வமாகப் பெற்றுக் கொண்டு, பாடசாலையை புதிய இடத்தில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.
இந்தக் கவனயீர்ப்பு நடவடிக்கையில் தொழிலாளர்களுடன் இணைந்து பிரதேச சமூக பிரதிநிதிகளும் கலந்துகொண்டு கருத்துகளை வெளியிட்டனர். மேலும், யூரி தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவர்களும் இதில் பங்கேற்று, தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அரசாங்கம் நேரடியாக தலையிட்டு, யூரி தோட்டப் பாடசாலையை உடனடியாக பாதுகாப்பான புதிய இடத்திற்கு மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

