“லயன் கிடையாது… லயர்!” – முதல்வர் ஸ்டாலின் மீது தமிழிசை விமர்சனம்

9 0

“ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் நான் தான் லயன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவிக்கிறார். ஆனால் அவர் லயன் கிடையாது லயர். அவர் லைனில் நின்று பொய் சொல்கிறார்” என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான கருத்து கேட்கும் கூட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை பங்கேற்று தொழில் துறையினரிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “இரட்டை எஞ்சின் ஆட்சியாக இருந்தால் மட்டுமே தமிழகத்திற்கு தேவையானவற்றை செய்து தர முடியும். தமிழக முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை கொடுத்த விஷயத்தில் தேர்தல் அறிவித்துவிட்டால் மத்திய அரசு அனைத்து திட்டங்களையும் நிறுத்தி விடும் என்பதுபோல செயற்கையான உரிமைப் பறிப்பை ஏற்படுத்துகிறார்.

தொடர்ந்து மத்திய அரசு தமிழக உரிமைகளை பறிப்பது போல ஒரு மாய தோற்றத்தை உருவாக்கி வருகிறார். அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான நிதி கொள்கைதான் உத்தரப் பிரதேசத்திற்கு ஒன்று, தமிழகத்திற்கு ஒன்று என்று இல்லை. அதனால் தமிழ்நாட்டைப் பார்த்து பார்த்து வஞ்சனை செய்வதைப் போல முதல்வர் பேசுவதை இனியும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

அமைச்சர் கே.என்.நேரு மீது ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு முதல் குற்ற அறிக்கை பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. மூன்று முறை அமலாக்கத் துறை சொன்ன பின்பும் அமைச்சர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யாமல் தமிழக அதிகாரிகள் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக செயல்பட்டு உள்ளனர்.

ரூ.2300 கோடி அளவுக்கு ஒரு தனி அமைச்சர் ஊழல் செய்கிறார் என்றால் ஒவ்வொரு வேலைகளுக்கும் 35 லட்சம், 45 லட்சம் கமிஷன் பெற்று வருவது வெளிச்சமாகி இருக்கிறது. ஒருவருக்கே இவ்வளவு ஊழல் என்றால் இன்னும் 10 அமைச்சர் இருக்கிறார்கள்.

ராகுல் காந்தி வெளிநாடுகள் சென்றபோதும் இந்தியாவை குறைத்தே பேசி வருகிறார். ராகுல் காந்திக்கு நாட்டுப்பற்றே கிடையாது. செல்வப்பெருந்தகை, மருது சகோதரர்கள் போல ஸ்டாலினையும் ராகுல் காந்தியும் ஒப்பிடுவதை எப்படி ஒத்துக்கொள்ள முடியும். காங்கிரஸ்காரர்கள் சீட்டுக்காக ஸ்டாலினை புகழ்ந்து வருகின்றனர்.