இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான எதிர்கால நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பில் ஒன்றியத்தின் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தலைமையில் அண்மையில் செவ்வாய்க்கிழமை (17) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்நாட்டின் இளைஞர்களுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் கொள்கை மற்றும் எண்ணக்கரு ரீதியான விடயங்களை ஒன்றியத்தின் ஊடாக விருத்தி செய்து அவற்றை அரச துறையிலுள்ள பொறிமுறைகள் மூலம் நடைமுறைப்படுத்தக்கூடிய வகையில் ஒன்றியத்தின் செயற்பாடுகள் அமைய வேண்டியதன் தேவையை ஒன்றியத்தின் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சினால் தற்பொழுது தயாரிக்கப்பட்டு வரும் உத்தேச தேசிய இளைஞர் கொள்கை தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.
அதற்கமைய, உத்தேச கொள்கை வரைபு தொடர்பில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுடன் கலந்துரையாடுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், இளைஞர்களுடன் தொடர்புபட்ட சட்டங்களுக்கு மறுசீரமைப்புகளை பரிந்துரைத்தல், தரவுகளை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சித்திட்டங்களை தயாரித்தல், இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்திற்கு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவங்களின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ளல் மற்றும் இளைஞர்களுக்கான சர்வதேச ஒன்றியங்களுடன் ஒன்றிணைந்து செயற்படுவது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான லசித் பாஷன கமகே மற்றும் தனுர திசாநாயக உள்ளிட்ட ஒன்றியத்தின் உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

