மன்னார் தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்காக ‘டைனமைட்’ வெடிபொருளை தமது உடமையில் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இரு மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (19) உத்தரவிட்டுள்ளது.
மன்னார் – தாழ்வுபாடு பகுதியில் இன்றைய தினம் அதிகாலை இலங்கை கடற்படை மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, மீன்பிடி நடவடிக்கைக்காக டைனமைட் வெடிபொருளை தமது உடமையில் வைத்திருந்த இரு மீனவர்களை ஓலைத்தொடுவாய் கடற்படை வீரர்கள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து மூன்று தொகுதி டைனமைட் வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைகளின் பின்னர், குறித்த இரு சந்தேகநபர்களையும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைத்தனர்.
அதனைத் தொடர்ந்து இன்றையதினம் இரு சந்தேகநபர்களும் மன்னார் நீதவான் நீதிமன்றம் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணைகளை மேற்கொண்ட நீதவான், குறித்த இரு மீனவர்களையும் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை, கைப்பற்றப்பட்ட டைனமோட் வெடிபொருட்களை இரசாயன பகுப்பாய்வுக்காக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் அனுப்பி வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

