நுவரெலியா பிரதான நகரில் லாப் எரிவாயு மற்றும் லிட்ரோ எரிவாயு விநியோகத்தில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த இரண்டு முதல் மூன்று நாட்களாக நுவரெலியா மற்றும் நானுஓயா பிரதேசங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுச் செல்கின்றனர். இருப்பினும், பலர் நீண்ட நேரம் காத்திருந்தும் சிலிண்டர் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் நிலையும் காணப்படுகிறது.
இந்நிலையில், எதிர்வரும் நாட்களில் எரிவாயு தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தில், இன்று வியாழக்கிழமை (19) பொதுமக்கள் தேவையற்ற விதத்தில் பீதியடைந்து சிலிண்டர்களை கொள்வனவு செய்ய நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர்.
விநியோகம் குறைவாகவும், தேவை அதிகமாகவும் இருப்பதால் நுகர்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது அவர்களின் அத்தியாவசிய சமையல் தேவைகளை பூர்த்தி செய்வதில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நுவரெலியாவின் பிரதான விநியோக நிலையங்களில் வழக்கத்தைவிடக் குறைந்த அளவிலேயே சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படுவதாக விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். சில பகுதிகளில் விநியோகம் தாமதமாகியுள்ளதாகவும், மேலும் சில இடங்களில் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரு வகை சமையல் எரிவாயுகளிலும் ஒன்றையாவது கொள்வனவு செய்ய முடியாத நிலை நிலவுவதால், நுகர்வோர் கடும் சிரமங்களுக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளனர்.

