இந்தியா தொடர்பான நிலைப்பாடு மாறியது: ஜே.வி.பி. மீது சுஜீவ சேனசிங்க குற்றச்சாட்டு

5 0

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர்  டில்வின் சில்வா இந்திய எதிர்ப்புக் கொள்கையை முன்னிலைப்படுத்திச் செயற்பட்டார். இதனால் 60 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்தார்கள். ஆனால் இன்று அவர் இந்தியாவுடன் இணக்கமாக உள்ளார். ஜனாதிபதி தற்போது இந்தியாவுடன் நெருங்கிய நண்பராகவே உள்ளார். இவர்களின் அரசியல் கொள்கை கால மாற்றத்துக்கு ஏற்ப மாற்றமடைந்துள்ளது. மக்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18) நடைபெற்ற  விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான  கட்டளைகள், மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள்  மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஆட்சிக்கு வந்தவுடன் அரச செலவுகளை குறைப்பதாக குறிப்பிட்டார்கள். வாழ்க்கைச்  செலவுகளை குறைப்பதாக குறிப்பிட்டார்கள். ஆனால் ஏதும் நடக்கவில்லை.  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  கடைப்பிடித்த பொருளாதார கொள்கையையே அரசாங்கம் முன்னெடுத்துச் செல்கிறது. எவ்வித மாற்றமும் இல்லை.

ஜனாதிபதி ஒவ்வொரு மாதமும் வெளிநாடுகளுக்கு செல்கிறார். ஆளும் தரப்பின் உறுப்பினர்  விமானத்தில் முதல் தர வகுப்பில் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். ஆனால் பொருளாதாரத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

சட்டத்தை அனைவருக்கும் பொதுவானதாக அமுல்படுத்துவதாக குறிப்பிடப்பட்டது.ஆனால் இன்று உண்மையில் சட்டம் அனைவருக்கும் சமமாக செயற்படுத்தப்படுகிறதா, இல்லை. ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டது. மஹிந்த, கோட்டா, பசில் ஆகியோர் கைது செய்யப்படவில்லை. இவ்வாறான நிலையில் எவ்வாறு சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்று குறிப்பிட முடியும்.

போராட்டங்களினால் நாடு பின்னோக்கிச் செல்லும் என்று அரசாங்கம் தற்போது குறிப்பிடுகிறது. யார் கடந்த காலங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு நாட்டை சீரழித்தது. மக்கள் விடுதலை முன்னணி தான் கடந்த காலங்களில் போராட்டங்களுக்கு தலைமை தாங்கியது.

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர்  டில்வின் சில்வா இந்திய எதிர்ப்புக் கொள்கையை முன்னிலைப்படுத்திச் செயற்பட்டார். இதனால் 60 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்தார்கள். ஆனால் இன்று அவர் இந்தியாவுடன் இணக்கமாக உள்ளார். ஜனாதிபதி தற்போது   இந்தியாவுடன்  நெருங்கிய  நண்பராகவே உள்ளார்.  இவர்களின் அரசியல் கொள்கை கால மாற்றத்துக்கு ஏற்ப மாற்றமடைந்துள்ளது. மக்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள் என்றார்.