தென்சீனக்கடலில் சீனாவின் உரிமையை நிலைநாட்டி சீன சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

294 0

201608030444401393_China-court-warns-against-illegal-fishing-in-riposte-to_SECVPFதென்சீனக்கடலில் சீனாவின் உரிமையை நிலைநாட்டும் விதத்தில் சீன சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு ஒன்றை நேற்று பிறப்பித்தது.

தென்சீனக்கடலின் மீது தொடர்ந்து சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு அந்த நாடு செயற்கைத்தீவுகளையும், ராணுவ தளங்களையும் அமைத்திருக்கிறது. ஆனால் தென் சீனக்கடலில் தங்களுக்கும் உரிமை உண்டு என்று பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் ஆகிய நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன.

தங்களுக்குள்ள உரிமையை நிலைநாட்டும் விதத்தில் திஹேக் நகரில் உள்ள சர்வதேச மத்தியஸ்த நிரந்தர தீர்ப்பாயத்தில் பிலிப்பைன்ஸ் வழக்கு தொடுத்தது. ஆனால் இந்த வழக்கை விசாரிக்கும் அதிகார வரம்பு, சர்வதேச தீர்ப்பாயத்துக்கு இல்லை என்று சொல்லி சீனா நிராகரித்தது.

அந்த தீர்ப்பாயம் தனது தீர்ப்பை கடந்த மாதம் 12–ந் தேதி வழங்கியது. அதில், ‘‘தென் சீனக்கடலில் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா வரலாற்று உரிமைகள் கோருவதற்கு சட்டரீதியில் எந்த முகாந்திரமும் இல்லை’’ என கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை பிலிப்பைன்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் வரவேற்றன. ஆனால் தீர்ப்பை ஏற்க முடியாது என சீனா நிராகரித்தது, ‘‘தென் சீனக்கடல் தீவுகளில் 2 ஆயிரம் ஆண்டுக்கு மேலாக வரலாற்று ரீதியிலான செயல்பாடுகளை சீன மக்கள் கொண்டுள்ளனர். சீனாவின் நிலைப்பாடு, சர்வதேச சட்டம் மற்றும் நடைமுறைகளின் படியானதுதான்’’ என்று கூறி விட்டது.

இந்த நிலையில் தென்சீனக்கடலில் சீனா தனது ஆதிக்கத்தை தொடருகிற வகையில் அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு நேற்று ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவு, கடல்சார் ஒழுங்கினை, நலன்களை பாதுகாக்கவும், நாட்டின் கடல்கள் அனைத்தின் மீதும் ஒருங்கிணைந்த நிர்வாகம் செய்யவும் ஒரு தெளிவான அடிப்படையை வழங்குவதாக அமைந்துள்ளது.

சர்வதேச தீர்ப்பாயத்தின் தீர்ப்பினை நிராகரிக்கிற வகையில் அமைந்துள்ள அந்த உத்தரவில் கூறி இருப்பதாவது:–

சீன பெருநிலப்பரப்பின் கீழ் வருகிற கடல்களில் சீன குடிமக்களோ அல்லது பிற வெளிநாட்டினரோ சட்டவிரோதமாக வேட்டையாடினாலோ அல்லது மீன்பிடித்தாலோ அல்லது அழிந்து வருகிற உயிரினங்களை கொன்றாலோ அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதில் நீதித்துறை அதிகாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. சீன நீர்ப்பகுதிகள் மீது மக்கள் நீதிமன்றங்கள் அதிகாரம் செலுத்தும். கடல்சார் நிர்வாகப்பணிகளை மேற்கொள்வதற்கு சீன அரசு துறைகளுக்கு ஆதரவு அளிக்கும். சீனா மற்றும் தொடர்புடைய வெளிநாட்டு தரப்புகளின் சட்ட உரிமைகளை பாதுகாக்கும். சீனாவின் இறையாண்மையை, கடல்சார் நலன்களை பாதுகாக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு,  உள்நாட்டு கடல்பகுதிக்கு மட்டுமல்லாது, மண்டலங்கள், அடுத்தடுத்து இருக்கும் மண்டலங்கள், பிரத்யேக பொருளாதார மண்டலங்கள் என அனைத்துக்கும் பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.