அறுவை சிகிச்சையால் தனது காலின் நீளத்தை அதிகரித்து சாதனைப் படைத்த சிறுவன்

20 0

பிரித்தானியாவின் நார்த்தாம்ப்டன் பகுதியைச் சேர்ந்த சிறுவன் எல்ஃபி பிலிப்ஸ் ஒரு நவீன அறுவை சிகிச்சை மூலம் தனது காலின் நீளத்தை அதிகரித்துக் கொண்ட முதல் சிறுவன் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

‘ஃபிபுலர் ஹெமிமீலியா’ என்ற அரிய வகை பிறவிக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட எல்ஃபியின் வலது கால், இடது காலை விட ஒரு அங்குலத்திற்கும் மேலாகக் குட்டையாக இருந்தது.

40,000 பிறப்புகளில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படும் இந்த பாதிப்பிற்கு, லிவர்பூலில் உள்ள எல்டர் ஹே குழந்தைகள் வைத்தியசாலை நிபுணர்கள் முன்னோடி சிகிச்சை அளித்தனர்.

வழக்கமாக குழந்தைகளுக்கு எலும்பின் வெளிப்பகுதியில் உலோகக் கருவிகளைப் பொருத்தியே காலின் நீளம் அதிகரிக்கப்படும்.

ஆனால், அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட இந்த புதிய முறையில், எல்ஃபியின் தொடை எலும்பின் மேற்பரப்பில் ‘மோட்டாரைஸ்டு டெலஸ்கோபிக் நெயில்’எனப்படும் ஒரு விசேஷ ஆணி பொருத்தப்பட்டது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ஒரு மாத காலத்திற்குத் தினமும் மூன்று முறை ஆல்ஃபியின் காலில் ஒரு காந்தக் கருவி வைக்கப்பட்டது.

இந்தக் காந்த விசை, காலில் பொருத்தப்பட்ட ஆணியை மெதுவாக (ஒரு நாளைக்கு சுமார் 1 மி.மீ) பிரித்தது. அந்த இடைவெளியை உடல் இயற்கையாகவே புதிய எலும்பு திசுக்களால் நிரப்பியது. இந்தச் சிகிச்சையின் மூலம் எல்ஃபியின் கால் 3 செ.மீ நீளமாக்கப்பட்டது.

அறுவை சிகிச்சை முடிந்து ஒரு வருடத்திற்குள், எல்ஃபி இப்போது கூடைப்பந்து விளையாடுவது மற்றும் ஓடிப் பிடித்து விளையாடுவது எனத் தனது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார்.

நிபுணர் நிக் பீட்டர்சன் கூறுகையில், வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு எலும்பு வளர்ச்சித் தட்டுகள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் இதுவரை இத்தகைய உள்-ஆணி சிகிச்சைகள் வழங்கப்படவில்லை.

அறுவை சிகிச்சையால் தனது காலின் நீளத்தை அதிகரித்து சாதனைப் படைத்த சிறுவன் | Boy Increasing The Length Of His Leg Surgery

 

ஆனால் எல்ஃபியின் வெற்றி, இனிவரும் காலங்களில் மற்ற குழந்தைகளுக்கும் அதிக வலியற்ற, பாதுகாப்பான இந்த சிகிச்சை முறைக்கு வழிவகுத்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

தற்போது எல்டர் ஹே வைத்தியசாலையில் மேலும் மூன்று குழந்தைகளுக்கு இந்த சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.