“திமுக அரசு வாங்கிய கடன் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்” – வானதி சீனிவாசன்

11 0

திமுக அரசு வாங்கிய கடன் மற்றும் செலவு விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் இன்று (பிப்.17) வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மத்திய பாஜக அரசு செய்த வர்த்தக ஒப்பந்தங்களால் தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாய் அதிகரிக்கும் என்று இடைக்கால பட்ஜெட்டில் திமுக அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

வருவாய்ப் பற்றாக்குறை 48,696.32 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2026-27-ம் ஆண்டில் திமுக அரசு 1 லட்சத்து 78 ஆயிரத்து 308 கோடி ரூபாய் கடன் பெற திட்டமிட்டுள்ளது. இதனால் வரும் 2027 மார்ச் 31-ம் தேதியன்று தமிழகத்தின் கடன் சுமை 10 லட்சத்து 71 ஆயிரத்து 770 கோடி ரூபாயாக இருக்கும் என இடைக்கால பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் ஒரு கோடியே 84 லட்சம் ரூபாயை திமுக அரசு கடன் வாங்கியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக, வெற்று விளம்பர மாடல் ஆட்சியை நடத்தியிருப்பது அதன் நிதி மேலாண்மையில் அப்பட்டமாக தெரிகிறது. வழக்கம் போலவே இந்த இடைக்கால பட்ஜெட்டில் வார்த்தை ஜாலங்கள், மக்களை ஏமாற்றம் தந்திரங்கள் தவிர வேறு எதுவும் இல்லை. திமுக தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இதுவாகத்தான் இருக்கும். இவ்வளவு கடன் வாங்கி அந்தப் பணம், எதற்காக, எப்படி செலவு செய்யப்பட்டது என்பது குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.