“தமிழகத்தின் நிதிநிலையில் செயற்கையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது” என்று பட்டியலிட்டு குற்றம்சாட்டினார், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.
தமிழக சட்டப்பேரவையில் 2026-27-க்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது, “தமிழகத்தின் நிதிநிலையில் செயற்கையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான, அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பல மாநிலங்களின் ஆட்சேபங்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு கருத்தில் கொள்ளாமல், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதங்களை சீரமைக்க, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அமைப்பு ஒப்புதல் அளித்தது.
ஏற்கெனவே ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கிடையில், இந்த வரி விகித மாற்றங்கள் மாநிலங்களின் நிதி நிலையில் மேலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். நடப்பு ஆண்டில் மட்டும் ரூ.9,600 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

