நாட்டின் 76 வருடகால சாபத்தை முடிவுக்குக் கொண்டுவந்து உழைக்கும் வர்க்கத்தின் கரங்களில் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கான தீர்க்கமான அரசியல் வேலைத்திட்டத்தை முன்வைத்து முன்னிலை சோசலிசக் கட்சியின் 4ஆவது தேசிய மாநாடு எதிர்வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு திங்கட்கிழமை (16) நுகேகொடையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரத்தினம் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் நாட்டின் அரசியல் நிலைவரம் குறித்து காரசாரமான கருத்துக்களை முன்வைத்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
76 வருடங்களாக நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த இரு பிரதான அரசியல் கும்பல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே 2024 ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் மக்கள் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வந்தனர்.
2022 மக்களின் அரகலய போராட்டத்தின் நேரடி விளைவே இந்த மாற்றமாகும். எனினும் ஆட்சியில் அமர்ந்த புதிய அரசாங்கம் பழைய ஆட்சியாளர்களின் அதே ‘நவதாராளவாத’ பொருளாதாரப் பாதையிலேயே பயணிக்கிறது. மக்கள் மீது வரிச் சுமைகளை ஏற்றிவிட்டு பெரும் முதலாளிகளுக்கு வரிச் சலுகைகளை வழங்கி வருகின்றனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்துள்ள அரசாங்கம் இலவசக் கல்வியையும் சுகாதாரத்தையும் இல்லாதொழிக்க முற்படுகிறது.
3000 கிராமப்புற பாடசாலைகளை மூடும் திட்டம் மற்றும் மருந்துத் தட்டுப்பாடு என்பன மக்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகின்றன. மறுபுறம் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப திருகோணமலை மற்றும் மன்னார் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை விற்பனை செய்ய அரசாங்கம் இரகசிய ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இது நாட்டின் இறையாண்மைக்கும் சக்திவள பாதுகாப்புக்கும் விடப்பட்ட சவாலாகும்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது அதைவிடக் கொடிய அடக்குமுறைச் சட்டங்களை கொண்டு வர முயற்சிக்கின்றனர். மக்களின் ஜனநாயகப் போராட்டங்களை முடக்குவதே இவர்களின் நோக்கம். கல்வி சுகாதார உரிமைகள் பறிக்கப்படும் போது தொழிலாளர்களின் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிஊழியர் சேமலாப நிதி ஆகிய நிதியங்கள் சூறையாடப்படும் போது மக்களுக்குப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.
எதிர்வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதி ‘வர்க்கத்திற்கு அதிகாரம் – அதிகாரத்திற்கு கட்சி’ எனும் தொனிப்பொருளில் எமது 4வது தேசிய மாநாடு நடைபெறவுள்ளது.
வெறும் ஆட்சி மாற்றங்கள் எமது மக்களுக்கு விடிவைத் தரவில்லை. இனிவரும் அரசியல் சூழல் என்பது உழைக்கும் வர்க்கத்திடம் அதிகாரம் கைம்மாறும் ஒரு தருணமாக அமைய வேண்டும்.
மலையக மக்கள், வடக்கு தமிழ் மக்கள் மற்றும் கிழக்கு முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்த அரசாங்கம் தவறிவிட்டது. மீண்டும் இனவாதம் தலைதூக்க இடமளிக்காது ஒரு பலமான இடதுசாரி மாற்றீட்டை எமது மாநாட்டின் மூலம் முன்வைப்போம்.
உலகளவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால் உக்ரைன் மற்றும் காசாவில் முன்னெடுக்கப்படும் மனிதாபிமானமற்ற போர்களுக்கு எதிராக ஒரு சர்வதேச இடதுசாரி இயக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும். எமது மாநாட்டில் சர்வதேச இடதுசாரிப் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.
எனவே இந்த மாற்றத்தை விரும்பும் தொழிலாளர்கள் மாணவர்கள் விவசாயிகள் மற்றும் அனைத்து இடதுசாரி சக்திகளையும் மார்ச் 1ஆம் திகதி சுகததாச உள்ளரங்கில் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கிறோம் என்றார்.

