நுண்நிதி, கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்திற்கு குழு அனுமதி – அரசாங்க நிதி குழுவில் விரிவான பரிசீலனை

11 0

நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் மற்றும் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம், விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள் என்பவற்றுக்கு நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டது.

அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ.த சில்வா தலைமையில் செவ்வாய்க்கிழமை (10) ஆம் திகதி கூடியபோதே இதுபற்றிக் கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தில் பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், நிமல் பலிஹேன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இலங்கை நுண்நிதி மற்றும் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையை அமைப்பதற்கான ஏற்பாடுகளை உருவாக்குதல், பணத்தைக் கடனுக்கு வழங்குதல் மற்றும் நுண்நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தல், பணம் கடன்வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நுண்நிதி நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்குதல் மற்றும் 2016ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நுண்நிதியளிப்புச் சட்டத்தை நீக்குதல் மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கத்தில் நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது

2024ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட இச்சட்டமூலத்திற்கான வரைபு உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டதுடன், அரசியலமைப்புக்கு முரணான விடயங்கள் குறித்த வரைபில் இருப்பதாக உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், தற்பொழுது முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தின் ஊடாக அரசியலமைப்புக்கு முரணான தன்மை நீங்கியுள்ளமை தெரியவருவதாக இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் குறிப்பிட்டார். அனைத்துத் தரப்பினதும் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்திற்கு குழுவின் தலைவர் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இந்தச் சட்டமூலத்தின் ஊடாக அமைக்கப்படும் அதிகாரசபையின் மூலம் பணத்தைக் கடனுக்கு வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நுண்நிதி நிறுவனங்களை முன்னெடுக்கும் நபர்களுக்கு அனுமதிப் பத்திரத்தை வழங்குவது மற்றும் அவர்களை ஒழுங்குறுத்துவது என்பவற்றை முன்னெடுக்கும் என்றும், பணிப்பாளர் சபையினால் இந்த அதிகாரசபை ஒழுங்குறுத்தப்படும் என்றும், அதிகாரசபையினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட நபர்கள் தவிர வேறு எவரும் கடன்களை வழங்க முடியாது என்றும் சட்டமூலம் குறித்து விளக்கமளித்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒன்லைனில் கடன் வழங்கும் செயல்முறை இந்த அதிகாரசபையின் ஒழுங்குபடுத்தப்படுமா என்று குழு அதிகாரிகளிடம் வினவியது. அதற்கு அமைய, அனுமதிப்பத்திரம் உள்ளவர்கள் மாத்திரமே ஒன்லைனில் கடன்களை வழங்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதே இந்தச் சட்டமூலத்தின் நோக்கம் எனவும் அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டினர்.

சமூகங்களை அடிப்படையாகக் கொண்ட நிதி நிறுவனங்களை வலுவூட்டுவது தொடர்பில் குறிப்பாக அந்த நிறுவனங்களுக்கான ஒழுங்குறுத்தல் கட்டணத்தை தளர்த்துவது அல்லது அதற்கான தகுதி அடிப்படைகளை இலகுபடுத்துவது குறித்து இந்தச் சட்டமூலம் கவனத்தில் கொள்கின்றதா என்பது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது. நடைமுறைச் செயற்பாட்டுப் பிரச்சினைகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான பாதுகாப்புத் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.

மின்னியல் வணிகச் செயற்பாட்டாளர்கள் (e-Commerce Operators) போன்றவர்கள் இந்தச் சட்டமூலத்தின் கீழ் உள்ளடக்கப்படவில்லையென்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

சட்ட மறுசீரமைப்புச் செயற்பாடுகளில் மக்களுக்குக் காணப்படும் அவநம்பிக்கையைப் போக்குவதற்கு பொதுமக்கள் மற்றும் அனைத்துப் பங்காளர்கள் மத்தியிலும் விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுக்குமாறு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சைக் குழு வலியுறுத்தியது. இதன் ஆரம்பகட்டமாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை உள்ளடக்கிய ஆவணமொன்றைப் பகிரங்கப்படுத்துமாறும் குழு ஆலோசனை வழங்கியது.

கடன் மற்றும் வைப்புத் துறைகள் இரண்டிலும் அதிகபட்ச வட்டி விகிதங்களை நிர்ணயிக்கும் சட்டப்பூர்வ அதிகாரங்கள் குறித்த அதிகாரசபைக்கு வழங்கப்படுவதால், சேமிப்பு மற்றும் கடன் நடவடிக்கைகளுக்கு நுண்நிதி நிறுவனங்கள் பயன்படுத்தும் பல்வேறு நிதிக் கருவிகளின் தன்மையைப் பாதுகாக்கும் வகையில் அத்தகைய அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.

பிரதேச செயலகங்களுக்கு அதிகாரங்களை வழங்குவது குறித்தும் குழு விரிவாக விவாதித்தது. சிறிய கடன் வழங்குநர்கள் அதிகாரசபையுடன் கையாள கொழும்புக்கு வர வேண்டிய அவசியமில்லை என்றும், தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு (விண்ணப்ப கையாளுதல், பிற அன்றாட பணிகள்) பிரதேச செயலக மட்டத்திற்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த செயல்முறையை திறம்பட மற்றும் திறமையாக செயல்படுத்த ஒரு வலுவான தகவல் தொழில்நுட்ப அமைப்பை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது.

மேலும், அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் 2464/15 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான (235ஆம் அத்தியாயமான) தீர்மானம் மற்றும் விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான மூன்று கட்டளைகள் என்பனவற்றையும் பரிசீலித்த குழு அவற்றுக்கும் அனுமதி வழங்கியது.