கிரிஷ் வழக்கு ஒத்திவைப்பு: சட்டம் ஒழுங்கு குறித்து நீதிமன்ற வளாகத்தில் நாமல் கடும் விமர்சனம்

7 0

இந்திய கிரிஷ் நிறுவனத்திடம் இருந்து 70 மில்லியன் ரூபா பணத்தைப் பெற்று அதனைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (16) உத்தரவிட்டது.

திட்டமிட்ட குற்றக் கும்பலால் சட்டத்தரணி ஒருவர் படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சட்டத்தரணிகள் இன்றைய தினம் நீதிமன்றப் பணிகளிலிருந்து விலகியிருந்தமையால் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

எவ்வாறாயினும், இன்றைய வழக்கு விசாரணையின் போது பிரதிவாதியான நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, நாட்டில் நிலவும் தற்போதைய பாதுகாப்புச் சூழல் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் குறித்துத் தனது கடுமையான அதிருப்தியை வெளியிட்டார்.

குறிப்பாக, சட்டத்தரணி ஒருவரே படுகொலை செய்யப்பட்டுள்ளமையானது, நாட்டின் சாதாரண பிரஜைகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அரசாங்கம் இவ்வாறான குற்றச் செயல்களைத் தடுத்துச் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவர்களைக் குற்றவாளிகளுடன் தொடர்புபடுத்தி உண்மையை மூடிமறைக்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

சட்டத்தரணிகளுக்கு மாத்திரமன்றி, வைத்தியர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்களுக்கும் அரசாங்கத் தரப்பிலிருந்து அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும், இது கடந்த காலப் போராட்டங்களின் போது இளைஞர்களைத் தவறாக வழிநடத்தியதைப் போன்றதொரு அபாயகரமான போக்காகும் என்றும் அவர் எச்சரித்தார்.

மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கவோ அல்லது முதலீடுகளை ஈர்க்கவோ முடியாத அரசாங்கம், இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் மூலம் மக்களின் கவனத்தை வேறு திசைகளில் திருப்புவதற்கு முற்படுவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்து நீண்ட காலம் கடந்தும், இன்னும் பழைய அரசாங்கங்கள் மீதே விரல் நீட்டிக் கொண்டிருப்பதை அவர் விமர்சித்தார்.

நிலக்கரி மோசடி, துறைமுகக் கொள்கலன் கடத்தல்கள் மற்றும் போதைப்பொருள் விவகாரங்களில் அரசாங்கத்தின் நேரடித் தலையீடுகள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய பொலிஸ் மற்றும் பொறுப்பு வாய்ந்த அமைப்புகள் தோல்வியடைந்துள்ள சூழலில், ஜனாதிபதி இனியும் பொய்களைக் கூறிக் கொண்டிருக்காமல் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.