மதுரை வடக்கு, மத்தி, மேலூர், உசிலம்பட்டி தொகுதிகளை கூட்டணி கட்சிகள் மிகத் தீவிரமாக கேட்டு வருவதால், இந்த தொகுதிகளில் சீட்டுக்காக காத்திருக்கும் அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 7 அல்லது தொகுதிகளில் போட்டியிடுவதற்கு அதிமுக முடிவு செய்துள்ளது. இதில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை மேற்கு, மேலூர் ஆகிய தொகுதிகளில் அதிமுக போட்டியிடுவது உறுதியாகி, அந்தந்த தொகுதிகளில் ஏற்கெனவே எம்எல்ஏ-வாக உள்ளவர்களையே வேட்பாளராக அறிவிக்க உள்ளதால், அவர்களை தேர்தல் பணிகளைப் பார்க்க கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.
அவர்களும் கடந்த ஒரு மாதமாக தேர்தல் பணிகளில் தீவிரமாக களம் இறங்கிவிட்டனர். மற்ற தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் இடங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இதுகுறித்து அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூறுகையில், “கடந்த இரு தேர்தல்களில் மதுரை மத்திய தொகுதியில் அதிமுக போட்டியிடவில்லை. இந்த முறை கூட்டணிக்கு விட்டுக்கொடுக்காமல் அந்த தொகுதியில் திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து அதிமுக களம் இறங்க ஆலோசனை நடக்கிறது. திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி ஆதரவாளர் ஒருவர், அந்த தொகுதியை கேட்டு அதிமுகவில் இணைவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அவர் அதிமுகவில் இணைந்தால் அவர் மத்திய தொகுதியில் களம் இறங்க வாய்ப்புள்ளது.
ஆனால் தேமுதிக அதிமுக கூட்டணியில் இடம்பெற்றால், இந்த தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்காக அக்கட்சி கேட்கிறது. அதனால் அதிமுக இந்த தொகுதியை தேமுதிகவுக்கு விட்டுக்கொடுத்துவிடும். அமமுகவும், மத்திய தொகுதியை முன்னாள் அமைச்சர் பா.காளிமுத்து மகன் அண்ணாதுரைக்காக கேட்பதாக கூறப்படுகிறது. அமமுக மேலூரை கேட்கும் நிலையில் அதிமுகவை சேர்ந்த
பெரியபுள்ளான் அந்த தொகுதியில் எம்எல்ஏவாக உள்ளதால் அந்த தொகுதியை அக்கட்சி விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. தேமுதிக கூட்டணிக்கு வராத பட்சத்தில், அமமுகவுக்கு கடைசி நேரத்தில் மத்திய தொகுதியை அதிமுக விட்டுக்கொடுக்கவும் வாய்ப்புள்ளது. அதனால், மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியில் யார் போட்டியிட போகிறார்கள் என்பது தற்போது வரை முடிவாகவில்லை.
மதுரை வடக்குத் தொகுதியை பேராசிரியர் ராம. சீனிவாசனுக்காக பாஜக கேட்கிறது. அதிமுக அவர்களுக்கு தெற்கு தொகுதியை கொடுக்க முன்வருவதாகவும், ஆனால், பாஜக வடக்கு தொகுதியையே கேட்பதாகவும் கூறப்படுகிறது.
வடக்கு தொகுதியில் அதிமுகவை சேர்ந்த டாக்டர் சரவணனும், பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் கேட்டு வருகிறார். மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு பெரும் பொருளாதார நஷ்டம் ஏற்பட்டதால் அவருக்கு கட்சித் தலைமை மாநகரத்தில் ஒரு தொகுதியை ஒதுக்க முன் வந்துள்ளது.
ஆனால், அவருக்கு ‘சீட்’ கொடுக்க மாநகர செயலாளர் செல்லூர் ராஜுவுக்கு விருப்பமில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், கட்சித் தலைமை விரும்புவதால், கடைசி நேரத்தில் மதுரை கிழக்கு தொகுதியில்கூட டாக்டர் சரவணனுக்கு சீட் கொடுக்க வாய்ப்புள்ளது.
ஆனால் வி.வி.ராஜன் செல்லப்பா, அவரது மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷை அந்த தொகுதியில் நிறுத்த விருப்பப்படுகிறார். உசிலம்பட்டியை ஆர்.பி.உதயகுமார், சமீபத்தில் அமமுகவில் இருந்து இணைந்த மகேந்திரனுக்காக கேட்கிறார்.
ஆனால் பார்வர்டு பிளாக், அமமுகவும் கேட்பதால் இந்த 2 கட்சிகளில் ஒன்றுக்காக உசிலம்பட்டியை விட்டுக் கொடுக்க வாய்ப்புள்ளது. இப்படி மதுரை மாவட்டத்தில் மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், மேலூரை தவிர மற்ற தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் யார், யார் போட்டியிடப் போகிறார்கள் என்பது தற்போது வரை உறுதியாகவில்லை” என்றனர்.

