நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரை யாழ்ப்பாணத்தில் அடகு வைத்த நபர் தலைமறைவு

15 0

நீர்கொழும்பு பகுதியில் வாடகைக்கு பெற்ற சொகுசு காரை யாழ்ப்பாணம் நகரில் உள்ள நபரொருவரிடம் அடகு வைத்து 80 இலட்சம் ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு தலைமறைவான நபரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

யாழ்ப்பாண நகரை அண்மித்த பகுதியில் அநாதரவாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் ஒன்றை கண்டறிந்த யாழ்ப்பாண பொலிஸார், அது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதனிடையே, நீர்கொழும்பு பகுதியில் வாகனங்களை வாடகைக்கு வழங்கும் நிறுவனம் ஒன்றில் இருந்து பெறப்பட்ட கார் காணாமல் போனதாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. பின்னர் குறித்த கார் யாழ்ப்பாண பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, நீர்கொழும்பு பொலிஸார் யாழ்ப்பாணம் சென்று அந்த காரை மீட்டு சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளில், வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனத்தில் இருந்து கார் ஒன்றை வாடகைக்கு பெற்ற நபர், சில நாட்கள் அதை பயன்படுத்திய பின்னர் காரில் பொருத்தப்பட்டிருந்த தடம் அறியும் (GPS) கருவியை செயலிழக்க செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, வாகன உரிமையாளர் நீர்கொழும்பு பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார். அதன் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கார் வாடகைக்கு பெற்ற நபர், யாழ்ப்பாணத்தில் உள்ள ஒருவரிடம் அந்த காரை அடமானமாக வைத்து 80 இலட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பின்னர், அடமானமாக பெற்ற கார் நீர்கொழும்பில் இருந்து வாடகைக்கு பெறப்பட்ட கார் என்பதும், அது தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்பதும் தெரியவந்ததைத் தொடர்ந்து, பணம் வழங்கிய நபர் பொலிஸ் நடவடிக்கைகளுக்கு அஞ்சியதால், அந்த காரை வீதியோரத்தில் அநாதரவாக விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

காரை அடமானம் வைத்து பணத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவான நபரை கைது செய்வதற்காக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.