பட்டதாரி ஆசிரியர் நியமன போட்டி பரீட்சை விண்ணப்ப நிபந்தனைகளில் திருத்தம் அவசியம்

10 0

நாட்டில் பொது சேவையில் உயர் தகைமைகளைக் கொண்ட பலர், அவற்றுக்கு பொறுத்தமற்ற கீழ் நிலை பதவிகளில் உள்ளனர். எனவே அவர்களுக்கு நியாயம் வழங்கும் பொருட்டு பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான போட்டி பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான நிபந்தனைகளில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் சனிக்கிழமை (14) கீழ் நிலைப் பதவிகளிலுள்ள பட்டதாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது நாட்டில் பொது சேவையில் உயர் தகைமைகளைக் கொண்ட பலர், அவற்றுக்கு பொறுத்தமற்ற கீழ் நிலை பதவிகளில் உள்ளனர். அவ்வாறு பதவிகளிலுள்ள பட்டதாரிகளுக்கும் நாட்டின் இலவசக் கல்விக்குள் பிரவேசிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். அதற்கமைய இவர்களை ஆசிரியர் சேவையில் உள்வாங்குவதற்கான

விண்ணப்பதாரர்களின் செல்லுபடியாகும் பட்டப்படிப்பு காலத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கமைய குறித்த காலம் 2025 டிசம்பர் 31ஆம் திகதியாக அறிவிக்கப்பட வேண்டும். பட்டப்படிப்பை நிறைவு செய்த பலரும் இன்றும் அலுவலக உதவி உத்தியோகத்தர்களாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். விவசாயத்துறை, இராசாயனவியல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பட்டதாரிகள் இவ்வாறான கீழ் நிலை பதவிகளில் உள்ளனர்.

அவர்களது கல்வி தகைமைக்கு அவை அவர்கள் வகிக்க வேண்டிய பதவி அல்ல. பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கான போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 19ஆம் திகதி நிறைவடையவுள்ளது. அதற்கு முன்னர் இவர்களுக்கான நியாயம் வழங்கப்பட வேண்டும். எனவே பட்டதாரிகளுக்கான போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான நிபந்தனைகளை மாற்றுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான நிபந்தனைகள் அடங்கிய சுற்று நிரூபத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. அவற்றில் இதுவும் ஒரு பிரதான குறைபாடாகும். எனவே பட்டம் பெற்று ஆனால் அலுவலகத்தில் பணி புரியும் பட்டதாரிகளுக்கு அரசாங்கம் நியாயத்தை வழங்க வேண்டும் என்றார்.