புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு அரசாங்கத்திற்கு அடிபணியும் ஊடக கலாசாரம் உருவாகும்!

8 0

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு நடைமுறைப்படுத்தப்பட்டால் அது 1977 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தனவினால் அறிமுகப்படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை விடவும் பாரிய ஆபத்துக்களை ஏற்படுத்தும் என லங்கா சமசமாஜக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சட்ட வரைவினால் மக்களுக்கு உண்மையான தகவல்களை வழங்கும் ஊடகத்துறை செயலிழக்கச் செய்யப்பட்டு அரசாங்கத்திற்கு அடிபணிந்து நடக்கும் ஊடக கலாச்சாரம் உருவாகும் அபாயம் நிலவுவதாக லங்கா சமசமாஜக் கட்சியின் அரசியல் குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர் சந்தன ரணசிங்க கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

இந்த உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவானது நாட்டுக்கும் ஒட்டுமொத்த மக்களுக்கும் மட்டுமன்றி நாட்டின் இயற்கை வளங்கள் காடுகள்  மற்றும் விலங்கினங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சுற்றுச்சூழலுக்கும் பாரிய பாதிப்பை ஏற் படுத்தும் ஒரு சர்வாதிகாரச் சட்டமாகும். ஆட்சியாளர்கள் தமது அதிகாரத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்காகவே இதனை முன்னெடுக்கின்றனர்.

இந்தச் வரைவு நடைமுறைக்கு வந்தால் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்ட  அனைத்து நற்பண்புகளும் முடக்கப்படும். மக்கள் ஆட்சியாளர்களின் அடிமைகளாக மாறும் அவலநிலை ஏற்படும். குறிப்பாகநாட்டின் உரிமைகளை வென்றெடுப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்த இடதுசாரி இயக்கத்தின் ஆரம்பகர்த்தாக்கள் என்ற ரீதியில் லங்கா சமசமாஜக் கட்சி இந்த உத்தேச சட்டமூலத்திற்கு தனது பலத்த எதிர்ப்பை வெளியிடுகின்றது. இந்தச் சட்டமானது ஒருபோதும் யதார்த்தமாக மாற அனுமதிக்கக் கூடாது எனவும் மக்கள் ஒன்றிணைந்து இதனைத் தோற்கடிக்க வேண்டும் என்றார்.