முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரளவின் கொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து பேராசிரியர் நிர்மல் தேவசிறி வெளியிட்ட கருத்துக்கள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நிர்மல் தேவசிறி இந்தத் தீர்ப்பை தவறு எனக் கூறி, தண்டனை பெற்றவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் எனக் கோருவது நீதியை சவாலுக்கு உட்படுத்தும் செயலாகும்.
மூன்று ஆண்டுகால நீண்ட விசாரணை, தடயவியல் ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் கம்பஹா மேல் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதிமன்றத் தீர்மானத்தை விமர்சிப்பதன் மூலம் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர முடியும்.
அமரகீர்த்தி அதுகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் நிட்டம்புவ பகுதியில் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். இத்தகைய வெறுக்கத்தக்க செயல்களுக்கு நிர்மல் தேவசிறி போன்றவர்கள் பரப்பிய வெறுப்புணர்வே காரணம்.
மக்கள் போராட்டத்தை தூண்டிவிட்டு, வன்முறைக்கு வழிவகுத்த இவர்களும் இக்கொலைகளுக்குப் பொறுப்புக் கூற வேண்டும். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தவறான கட்டளைகளினால் வன்முறையை கட்டுப்படுத்த முடியாமல் போனது. முறையான சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இந்த உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம்.
மேலும், தற்போதைய அரசாங்கம் வதந்திகள் மற்றும் பொய்களைப் பரப்பியே ஆட்சிக்கு வந்தது. போராட்டக் காலங்களில் பாராளுமன்றத்தை எரிக்கச் சொன்னவர்கள் இன்று அமைச்சரவையில் இருக்கின்றமை ஆபத்தானது என்றார்.

