நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் “சிஸ்டம்” சரியில்லை என்று கூறியது கண்டிக்கத்தக்குரியது என தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் என தெரிவித்ததார்.
தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக வனத்துறையில் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த 206 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இறைச்சிக்கு மாடுகளை விற்பனை செய்வதற்கு தடை விதித்தது தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தி முடிவு அறிவிக்கப்படும். தமிழகத்தில் வரலாறு காணாத அளவுக்கு வறட்சி நிலவுவதால் காட்டு விலங்குகள் சில நேரங்களில் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. அதை தடுக்கும் வகையில் வன விலங்குகளுக்கு மலைப்பகுதியில் உள்ள தொட்டிகளில் குழாய்கள் மூலம் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க கட்டிட கலை வல்லுனர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். ஜெயலலிதா நினைவிடம் உலகில் சிறந்ததாக அமைய இருக்கிறது. முதல்-அமைச்சரை, எம்.எல்.ஏ.க்கள் தனித்தனியாக சந்தித்து பேசுவதில் எந்த தவறும் இல்லை. அவ்வாறு பேசும் போது அவரவர் தொகுதிக்கான கோரிக்கைகளை எடுத்துக்கூறி நிறைவேற்ற முடியும். மேலும் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார்.
நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவது அவரது விருப்பம். ஆனால் தமிழகத்தில் “சிஸ்டம்” சரியில்லை என்று கூறியது கண்டிக்கத்தக்கது. தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறப்பதில் எந்த தவறும் கிடையாது. சட்டசபைக்கு கடந்த 6 ஆண்டுகளாக கருணாநிதி வரவில்லை. இருந்தாலும் வைரவிழா கொண்டாடுகிறார்கள். அது அவர்களது விருப்பம் ஆகும். அதேபோல் சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறப்பது எங்களது உரிமை ஆகும்.
அ.தி.மு.க. இரு அணிகளும் இணைய நாங்கள் தயாராக இருக்கிறோம். மற்றொரு பிரிவினரை வாருங்கள் என்று தொடர்ந்து அழைத்து வருகிறோம். ஆனால் அவர்கள் இதுவரை வரவில்லை. எங்கள் அணியில் 123 எம்.எல்.ஏ.க்கள், பெரும்பாலான எம்.பி.க்கள் உள்ளனர். 98 சதவீதம் கட்சி நிர்வாகிகளும், 50 மாவட்டங்களில் 48 மாவட்ட செயலாளர்களும் உள்ளனர். எனவே 2 அணிகளும் இணைவதில் தாமதம் ஏற்பட்டு இருப்பதால் தொண்டர்கள் சோர்வடைந்து இருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது.
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்ற ரகசியத்தை இப்போதே கூற முடியாது. தேர்தல் அறிவிக்கப்படும் நேரத்தில் உரிய முடிவு தெரிவிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.
இதைதொடர்ந்து பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள வனத்துறை அலுவலக வளாகத்தில், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் மற்றும் நெல்லை வன மண்டலத்தில் சூழல் மேம்பாட்டு குழு மக்களுக்கு மாற்றுத்தொழில் புரிவதற்கான கடன் உதவி வழங்கும் விழா நடந்தது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு, 810 பேருக்கு ரூ.87 லட்சம் கடன் உதவிகளை வழங்கினார்.

