அமெரிக்கா உலக அமைதிக்கு ஒரு அச்சுறுத்தல்: ஜேர்மானியர்கள் கருத்து

12 0

பராக் ஒபாமா அமெரிக்காவின் ஜனாதிபதியாக 2009ஆம் ஆண்டு பதவியேற்றபோது, மற்ற நாடுகளுடனான உறவுகள் விவகாரத்தை அவர் சரியாகக் கையாளுவார் என 93 சதவிகித ஜேர்மானியர்கள் நம்பினார்கள்.

ஆனால், இன்று, ட்ரம்பின் ஆட்சியின் கீழ் அமெரிக்கா உலக அமைதிக்கு ஒரு அச்சுறுத்தல் என ஜேர்மானியர்கள் கருதுவதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.

அமெரிக்கா உலக அமைதிக்கு ஒரு அச்சுறுத்தல்

Allensbach என்னும் ஜேர்மன் சந்தை ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில், உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும் விடயங்களில் ரஷ்யா மற்றும் சீனாவுடன், அமெரிக்காவும் ஒன்று என ஜேர்மானியர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் கருதுவது தெரியவந்துள்ளது.

 

அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, நேட்டோ நாடுகளுடனான அமெரிக்காவின் தற்போதைய உறவு. முந்தைய அமெரிக்க ஆட்சியாளர்கள் நேட்டோவையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் முக்கிய கூட்டாளர்களாக கருதினார்கள்.ஆனால், ட்ரம்போ, நேட்டோ உறுப்பு நாடுகள் தங்கள் பாதுகாப்புக்கு தாங்கள் கூடுதல் பொறுப்பேற்கவேண்டும் என்றும், ராணுவத்துக்கான செலவை அதிகரிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், உக்ரைன் ரஷ்யப் போர் விவகாரம் மற்றும் கிரீன்லாந்தைக் கைப்பற்றும் விடயம் ஆகிய விடயங்களால், அமெரிக்கா நம்பத்தகுந்த கூட்டாளர் அல்ல என்னும் கருத்து அதிகமாகிவருகிறது.

அதனுடன், ஜேர்மனியிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதல் வரி, அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்வோர் சந்தித்த விரும்பத்தகாத நிகழ்வுகளும் சேர்ந்துகொள்ள, ஜேர்மானியர்கள் அமெரிக்கா மீதான நம்பிக்கையை இழந்துள்ளார்கள் என்பது தெளிவாக புலப்படுகிறது.