‘கெடுபடி’ மீறிய தவெக தொண்டர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் ஆர்வம் வரை – சேலம் விஜய் பரப்புரை எப்படி?

13 0

சேலத்தில் கடும் கெடுபிடிகளை மீறி, தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் போலி அடையாள அட்டைகளை காண்பித்து தொண்டர்கள் திரண்டு வந்திருந்தனர். அதேபோல, கல்லூரிக்கு ‘கட்’ அடித்து விட்டு மாணவ, மாணவிகள் தவெக தலைவர் விஜய் வரும் சாலைகளின் இரண்டு புறங்களிலும் திரளாக நின்று காத்திருந்து வரவேற்பு கொடுத்தனர்.

சேலம் சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் தாளமுத்து நடராஜன் மைதானத்தில்நடந்த தவெக தலைவர் விஜய் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமாக அடையாள அட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சி நடக்கும் மைதானம் 11 ஏக்கர் பரப்பளவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க கூடியதாக இருந்தது. ஆனால், நிகழ்ச்சி மைதானத்துக்குள் 5 ஆயிரம் பேர் பங்கேற்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு, நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

தவெக தலைவர் விஜய்யை காணும் ஆவலில், காலை 6 மணி முதல் விழா நடக்கும் பகுதியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சூழ்ந்து வந்தனர். போலீஸார் எருமாபாளையம், சீலயநாயக்கன்பட்டி பை-பாஸ் சர்வீஸ் சாலைகளில் பேரிகாட் அமைத்து கூட்டத்தை ஒழுங்குப்படுத்தி அனுப்பி வைத்தனர். பெண்களுக்கும், ஆண்களுக்கும் தனிதனி நுழைவு வாயில் மூலம் கட்சி நிர்வாகிகள் அனுமதிக்கப்பட்டனர்.

நுழைவு வாயிலில் சோதனையில் ஈடுபட்ட போலீஸார் அடையாள அட்டை இல்லாமல் நுழைய முயன்ற தொண்டர்களை பிடித்து இழுத்து வெளியேற்றி அனுப்பி வைத்தனர். இருப்பினும், ஏராளமான தொண்டர்கள் அடையாள அட்டையை கலர் ஜெராக்ஸ் எடுத்து போலீஸார் கண்களில் மண்ணை தூவி உள்ளே நுழைந்து, விஜயை கண்டு உற்சாகம் அடைந்தனர்.

அதேபோல, சேலம் காமலாபுரம் விமான நிலையத்துக்கு விஜய் பகல் 11.20 மணிக்கு தனி விமானத்தில் வந்தடைந்தும், அங்கிருந்து கார் மூலமாக விழா நிகழ்ச்சி நடைபெறும் சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் பகுதிக்கு புறப்பட்டார். விமான நிலையத்தில் இருந்து வழி நெடுகிலும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது.

படம்: எஸ்.குரு பிரசாத்

கல்லூரி மாணவ, மாணவிகள் பலரும் கல்லூரிக்கு செல்லாமல் ‘கட்’ அடித்து விட்டு விஜய்யை காண அவர் வரும் வழி சாலையில் திரண்டு நின்று வரவேற்பு கொடுத்தனர். வழி நெடுகிலும் திரண்ட தொண்டர் கூட்டத்தால், விஜய் கார் மெதுவாக விழா மேடையை ஒரு மணி நேரத்துக்கு பின் 12.20 மணிக்கு வந்தடைந்தது. விழா மேடையில் விஜய்யை கண்ட ரசிகர்கள் விசில்களை ஊதி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

குட்டி ஸ்டோரி மிஸ்சிங்: வழக்கமாக தவெக தலைவர் விஜய் சினிமா நிகழ்ச்சியாக இருந்தாலும், அரசியல் மேடையாக இருந்தாலும் ‘குட்டி ஸ்டோரி’ கூறுவார். விஜய் ஒரு ‘குட்டி ஸ்டாரி’ கூறட்டுமா என்றதும் தொண்டர்கள் உற்சாக குரலெலுப்பி காதை கூர்மையாக்கி கவனிப்பது வழக்கம். சேலத்தில் நடந்த நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் குட்டி ஸ்டோரி கூறுவார் என ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தொண்டர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

<div class="paragraphs"><p>படம்: எஸ்.குரு பிரசாத்</p></div>

படம்: எஸ்.குரு பிரசாத்

தனது உரையை 40 நிமிடங்களில் முடித்துக்கொண்ட விஜய், எந்த குட்டி ஸ்டோரியும் கூறவில்லை. ஆளுங்கட்சிக்கு சூடு வைப்பது போல மறைமுகமாக குட்டி ஸ்டோரி மூலம் விஜய் தாக்கி பேசும், அவரது பாணி ‘மிஸ்’ ஆனதால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தவெக மாவட்ட செயலாளர் மகளுக்கு நிகழ்ச்சி மைதானதுக்குள் அனுமதி மறுத்த போலீஸ்:

சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் தலைமையில் சீலநாயக்கன்பட்டியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கான முழு ஏற்பாடுகளையும் மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் அங்கும், இங்கும் ஓடியும், நிர்வாகிகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று நிகழ்ச்சிக்கான பணிகளை மும்மரமாக ஈடுபட்டிருந்தார்.

தவெக மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் மகள், நிகழ்ச்சி மைதானத்துக்கு பெண்களுக்கான தனி நுழைவு வாயிலில் செல்ல முயன்றார். அப்போது, அவரிடம் அடையாள அட்டை ஏதுமில்லாததால், போலீஸார் உள்ளே அனுமதிக்க மறுத்தனர். தவெக மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் மகள் என்று கூறியும், அடையாள அட்டை இல்லாததால், அவரை விட போலீஸார் மறுத்துவிட்டனர். இதுபற்றி தொண்டர்கள் நிகழ்ச்சி பணியில் ஈடுபட்டிருந்த தமிழன் பார்த்திபனிடம் தகவல் கொடுக்க, அவர் நேரடியாக நுழைவு வாயில் பகுதிக்கு வந்து, போலீஸாரிடம் பேசி, அவரது மகளை உள்ளே அனுப்பி வைத்தார்.