“பாஜக உடன் திமுக நல்ல உறவில்தான் இருக்கிறது” – தவெக நிர்மல்குமார் கருத்து

9 0

 “இந்த நான்கரை ஆண்டுகளில் எத்தனை முறை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரின் பெயரைக் கூறி முதல்வர் ஸ்டாலினும் அவரது குடும்பத்தினரும் பேசியிருக்கிறார்கள். மத்திய அரசுடன் நல்ல உறவில்தான் திமுக இருக்கிறது” என தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஒன்றிய அரசின் பட்ஜெட் குறித்து அடுத்த நாளே கண்டனம் தெரிவித்தோம். இது தமிழகத்துக்கு எதிரான பட்ஜெட் என தெளிவாக தெரிவித்துவிட்டோம்.

திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் கழித்துதான் மக்கள் உரிமை தொகை அளித்தனர். மக்களை ஏமாற்றி வருகிறார்கள். 1,100 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுள்ளதாக சொல்லியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இது மூலம் வேலைக்கு சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என சொல்ல முடியுமா? திமுக ஆட்சிக்கு பிறகு பல மக்கள் வேலை தேடி வெளியே செல்கிறார்கள்.

அதிமுகவின் போஸ்டர்களில் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் படங்கள் இல்லை. அதிமுகவினர், திமுகவினரைப் பற்றி பேசுவதே இல்லை. எல்லாருக்கும் ஒரே எண்ணம் எங்களைப் பற்றி பேசுவது மட்டும்தான்.

இந்த நான்கரை ஆண்டுகளில் எத்தனை முறை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரின் பெயரைக் கூறி முதல்வர் ஸ்டாலினும் அவரது குடும்பத்தினரும் பேசியிருக்கிறார்கள். அவர்கள் கடைசி வரை ஆளுநரைப் பற்றி மட்டும்தான் பேசியிருக்கிறார்கள். ஒன்றிய அரசு, அதாவது பாரதிய ஜனதாவுடன் நல்ல உறவில் இருக்கிறார்கள். பல ஆயிரம் கோடிகளை ஏமாற்றிவிட்டு, பல நூறுகளை கொடுத்து ஏமாற்றி வருகிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகையை யாரோ முடக்கப் பாக்கிறார்கள் என பொத்தாம் பொதுவாக தனது எக்ஸ் தளத்தில் போட்டு இருக்கிறார். தைரியம் இருந்தால் யார் அதை முடக்க பார்த்தார்கள் என சொல்லட்டும். விஜய் கூட்டத்தில் பங்கேற்றவர் இறந்தது வருத்தம் அளிக்கிறது. இனிமேல் இதுபோல நடக்காது. விசில் சின்னம் எல்லா மக்களிடமும் சென்று சேர்ந்து விட்டது” என்று அவர் கூறினார்.